சென்னை:

மிழகத்தில் புதிதாக தொடங்கப்பட உள்ள கள்ளக்குறிச்சி, அரியலூர் புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் தமிழகம் முழுவதும் 24 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில், 3,350 எம்.பி.பி.எஸ். இடங்கள் இருக்கின்றன. இதுமட்டுமின்றி கடந்த ஆண்டு, திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூர் ஆகிய 9 இடங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய அரசு  ஒப்புதல் வழங்கியது.

பின்னர் பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க அரியலூர், கள்ளக்குறிச்சியில் புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடக்க தமிழகஅரசு மத்திய அரசிடம் ஒப்புதல் கோரி கடிதம் எழுதியது. இதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் அனுமதி அளித்து, அதற்கு முதற்கட்டமாக நிதியையும் ஒதுக்கியது.

இந்த நிலையில், தமிழகஅரசும் தன் பங்காக கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரிக்கு- ரூ.382 கோடியும், அரியலூர் மருத்துவ கல்லூரிக்கு – ரூ.347 கோடியும் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டு உள்ளது.

ஏற்கனவே  புதிய  6 கல்லூரிகளுக்கான பூர்வாங்க பணிகளுக்கு தலா ரூ.100 கோடியும், அதற்கான நிலத்தையும் தமிழக அரசு ஒதுக்கியது. மேலும், அந்தக்கல்லூரிகளுக்கு முதல்வர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் தற்போது மேலும் 2 கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதன் மூலம் எம்.பி.பி.எஸ். இடங்களில் தமிழகம் முதலிடம் பிடிக்க வாய்ப்பு உருவாகி உள்ளது.