டில்லி:
தங்க நகை விற்பனைக்கு ஹால்மார்க் முத்திரையுடன் கேரட் அளவையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று உத்தரவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தற்போது மக்கள் தாங்கள் வாங்கும் தங்கத்தின் தரத்தை அறிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. அதனால் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது வரும் ஜனவரியில் இருந்து அமலுக்கு வரும்.
தற்போது சில நகைகளில் பிஐஎஸ் முத்திரை பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இதன் மூலம் மக்கள் தங்கத்தின் தரத்தை அறிய முடியாத நிலை உள்ளது. மேலும், ஹால்மார்க் முத்திரையுடன் எத்தனை கேரட் தங்கத்தில் நகை செய்யப்பட்டுள்ளது என்பதையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும். 14 கேரட், 18 கேரட், 22 கேரட் என 3 பிரிவுகளில் இது மேற்கொள்ளப்படும்’’ என்றார்.