சென்னை: வெள்ளிக்கிழமை கோவில்கள் திறப்பது குறித்து அரசே முடிவெடுக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக வழிபாட்டுத்தலங்கள் வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் அடைக்க தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த தடை பல மாதங்களாக தொடர்கிறது.  ஆனால், இந்துக்களின்  பண்டிகை காலம் என்பதால் கோவில்களை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்து வருகின்றனர். ஆனால், ஸ்டாலின் அரசு அதை ஏற்க மறுத்து வருகிறது.

இந்த வாரம் வெள்ளிக்கிழமை விஜயதசமி எனப்படும் சரஸ்வதி பூஜை வருவதால் கோவிலை திறக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு  தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை பட்டியலில் வராததால் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும்  மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி நீதிபதிகள் ஆர்.மகாதேவன், அப்துல் குத்தூஸ் அமர்வில் முறையிட்டார்.

அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி தான் கோவிலில் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதுகுறித்து அரசின் கருத்தை தெரிவிக்குமாறு கூறிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை  பிற்பகல்  தள்ளி வைத்தனர்.

அதன்படி பிற்பகல் விசாரணை நடந்தது. அப்போது, அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால் அதிக அளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அதன்படியே தமிழ்நாட்டில் கோவில்கள் அடைக்கப்பட்டு உள்ளது என்றும்,  மேலும் இது தொடர்பாக  நாளை  தமிழக முதலமைச்சர் மருத்துவ நிபுணர்களுடன்  நடத்த உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அரசின் தகவலை ஏற்றுக்கொண்டு நீதிபதிகள்,  விஜயதசமிக்கு கோவில்களை திறப்பது தொடர்பாக தமிழக அரசு முடிவெடுக்கலாம்  என்று கூறி, வழக்கை ஒத்தி வைத்தது.