சென்னை,
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு நிலங்களை அடையாளம் கண்டு மீட்க தமிழக அரசு, சிறப்பு தனிப்படை அமைக்காவிட்டால் நீதிமன்றமே குழுவை அமைக்க உத்தரவிட நேரிடும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அரசு நிலங்களை அடையாளம் கண்டு மீட்டு பராமரிப்பதற்கு சிறப்பு தனிப்படை அமைக்கக் கோரி வி.பி.ஆர்.மேனன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் தமிழக அரசுத் தரப்பில் வருவாய் துறை செயலர் வெங்கடேசன் பதில் மனு தாக்கல் செய்தார் அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஜி.பி.எஸ். கருவிகளை மத்திய, மாநில அரசுகளின் நிதி மூலம் வாங்க வேண்டியுள்ளது. அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக மனுதாரர் கூறிய பரிந்துரைகளை அரசு ஆய்வு செய்து வருகிறது. அதேபோல, இந்த பரிந்துரைகள் சாத்தியமானவையா என்றும், இந்த பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது. உயர் நீதிமன்ற உத்தரவின்படி நிபுணர்கள் குழுவை அமைப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அரசு பதில் மனுவில் கூறியுள்ளது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது , மனுதாரர் வி.பி.ஆர்.மேனன், நேரில் ஆஜராகி, ஆக்கிர மிப்புகளை கண்டறிவதற்கான அளவீட்டுப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு, 50 சதவீதத்தில் இருந்து, 100 சதவீதமாக அதிகரித்துள்ளது என்றும்,
அளவீட்டுப் பணிகளுக்கு மூன்று கிராமங்களை மட்டுமே தமிழக அரசு தேர்வு செய்துள்ளது. இந்த பணிகள் இன்னும் முடிவடையவில்லை.
மாநிலம் முழுவதும் உள்ள 16,500 கிராமங்களையும் ஆய்வு செய்து முடிக்க நூறு ஆண்டுகளாகி விடும் எனத் தெரிவித்தார்.
இதையடுத்து கூறிய நீதிபதிகள்:
ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அரசு நிலங்களை கண்டுபிடித்து மீட்பதற்கான குழுவை அரசு அமைக்காவிட்டால், நீதிமன்றமே அமைக்க நேரிடும் என்று எச்சரிக்கிறோம்
.இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 10ம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.
இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவியாக வருவாய் துறை செயலர் அடுத்த மாதம் 10ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.