சென்னை: அரசுக்கு சொந்தமான 17 ஏக்கர் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை 4 மாதங்களுக்குள் அகற்றுமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மதுரை புதூரைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் உயர் நீதிமன்ற மதுரையில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பான மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், ‘மதுரை புதூர் கொடிக்குளம் பாரத் நகர் மற்றும் சர்வேயர் காலனி பகுதியில் சுமார் 17 ஏக்கர் பரப்பளவு கொண்ட நீர் நிலைகள் உள்ளன.
இந்த நிலங்கள் வருவாய்த்துறை ஆவணங்களின்படி, அரசு புறம்போக்கு ஓடை மற்றும் கண்மாய் (நீர்நிலை) என வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இந்த நிலத்தை ரியல் எஸ்டேட் அதிபர்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து, மணல் மற்றும் ஜல்லிகளை கொண்டு நிரப்பி, வீட்டு மனைகளாக மாற்றியுள்ளனர். தற்போது அங்கு 300-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதிலில், அரசு கண்மாய் நிலத்தில் வீடுகள் கட்ட எந்த திட்ட அனுமதியும் வழங்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருவாய் துறை அதிகாரிகளுக்கு நான் பலமுறை மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக அதிகாரிகள் ஒருவருக்கொருவர் கடிதங்களை மாற்றிக்கொண்டனர்.
உதாரணமாக, தான் கொடுத்த மனுவை, வருவாய் கோட்டாட்சியர் வட்டாட்சியருக்கும், பொதுப்பணித் துறைக்கும் கடிதங்களை அனுப்பியுள்ளார். ஆனால், இதுவரை ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்தவொரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிகாரிகளின் இந்த மெத்தனப் போக்கினால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நிலத்தடி நீர் மட்டமும் குறையும் அபாயம் உள்ளது.
எனவே, மதுரை சர்வேயேர் காலனி பாரத் நகர் பகுதியில் அரசு புறம்போக்கு கண்மாய் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த மனுமீதான விசாரணை உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் ஜிஆர்சுவாமிநாதன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பந்தப்பட்ட இடம் அரசு புறம்போக்கு நிலம் என்றும், நீர்நிலை கண்மாய் பகுதிகள் ஆக்கிரமிப்பில் உள்ளது என அரசு தரப்பில் உறுதி செய்யப்பட்டது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு தனித்தனியே நோட்டீஸ் வழங்கி, முறையாக அளவீடு செய்து அனைத்து ஆக்கிரமிப்புகளையும் 4 மாதங்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
[youtube-feed feed=1]