பெரியகுளம்: பெரியகுளம் பகுதியில் உள்ள ஒரு அரசு நிலத்தை அதிமுகவினர் உள்பட சிலருக்கு தாரை வார்த்த 2 தாசில்தார்கள் உள்பட 7 அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு நிலங்களை கடந்த ஆட்சியில் சிலர் ஆக்கிரமித்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலங்களை அதிகாரிகள் துணையுடன் பெரியகுளம் அ.தி.மு.க. முன்னாள் ஒன்றியச் செயலாளர் அன்னபிரகாஷ் மற்றும் தனிநபர் சிலர் அபகரித்து தங்களின் பெயரில் பட்டா பெற்றுள்ளனர்.
இதுதொடர்பான புகாரின் பேரில் விசாரணை நடத்த தமிழகஅரசு உத்தரவிட்டது. பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் பெரியகுளத்தை சுற்றி 182 ஏக்கர் அரசு நிலங்கள் அபகரிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அரசு நிலங்களை அதிமுகவினர் அபகரிக்க உறுதுணையாக செயல்பட்ட 2 தாசில்தார்கள் உள்பட 7 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். தொடர்ந்து, அபகரிக்கப்பட்டநிலங்களுக்கான பட்டா ரத்துசெய்யப்பட்டு, மீட்கப்பட்டது. இந்த விவகாரங்களில் கோடிக்கணக்கான ரூபாய் விளையாடி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, இந்த நிலம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி வசம் மாற்ற தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு பரிந்துரை செய்தார். இதனை ஏற்ற அவர் இந்த வழக்கை சிபிசிஐடி வசம் மாற்றுவதற்கான உத்தரவை பிறப்பித்தார்.