சென்னை: பணிக்காலத்தின்போது உயிரிழக்கும் அரசு மருத்துவர்களின் வாரிசுகளுக்கும் அரசுப் பணி வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
சென்னையில் நடைபெற்ற அரசு மருத்துவர் சேமநலநிதி வழங்கும் நிகழ்ச்சியில் , தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று, சேமநல நிதியை வழங்கினார். அதன்படி, 7 பேருக்கு, ரூ. 7 கோடியை வழங்கினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, பணிக் காலத்தில் இறந்த அரசு மருத்துவர்களின் குடும்ப வாரிசுகளுக்கு இனி அரசுப் பணி வழங்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டார்
அதன்படி, பணிக்காலத்தில் மரணம் அடையும் அரசு மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் மற்ற துறைகளில் அரசுப் பணி வழங்கப்படுவது போல, மருத்துவதுறையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் இறந்த 3 ஆண்டுகளுக்குள் வாரிசுகள் பதிவு செய்தால் அரசுப் பணி நியமனம் செய்யப்படும். வாரிசுகள் விண்ணப்பித்தால் இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர் என்ற மூன்று பணிகளில் ஒரு பணியை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.