சென்னை: அரசுவேலை வாங்கித்தருவதாக கூறி பணமோசடி செய்ததாக எழுந்தபுகாரின் பேரில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி யின், முன்னாள் உதவியாளரின் நண்பர் கைது செய்யப்பட்டார். தலைமறைவான இவரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், 3 மாதங்களுக்கு பிறகு இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியின்  தனி உதவியாளராக இருந்தவர் மணி. இவர்மீது அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியதாக புகார் உள்ளது. இவரது நண்பர்,  சேலம் அருகே ஓமலூர் அருகேயுள்ள செம்மாண்டப்பட்டியை சேர்ந்த செல்வகுமார். இவர் எடப்பாடியார் பேரவை என்ற அமைப்பை தொடங்கியதுடன், எடப்பாடி பழனிச்சாமியுடன் நட்பு பாராட்டி வந்தார்.

எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் மணியும், செல்வகுமாரும் நெருங்கிய நண்பர்கள்  என்று கூறப்படுகிறது. இதனால், இவர்கள் கூட்டாக சேர்ந்து அரசு வேலை வாங்கித்தருவதாக சிலரிடம் பணம் பெற்றுள்ளனர். சுமார் 17 பேரிடம்  ரூ.1.37 கோடி அளவில் பணம் வாங்கி ஏமாற்றி விட்டதாக புகார்கள் கூறப்பட்டது. இதில், பழனிச்சாமி பிஏ மணி ஏமாற்றிவிட்டார் என எடப்பாடி பேரவை தலைவர் செல்வகுமார் அவர் மீது புகார் கொடுத்திருந்தார்.

இதுதொடர்பாக மணி, செல்வக்குமார் மீது சேலம் மாவட்ட குற்றவியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவர்களை கைது செய்ய முயன்றபோது, இதுகுறித்து தகவல் அறிந்த இருவரும் தலைமறைவானார்கள். இந்த புகாரில்,  சில திங்களுக்கு முன்பு மணி கைது செய்யப்பட்ட நிலையில், செல்வகுமாரை தொடர்ந்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில்  பதுங்கி இருந்த செல்வகுமாரை சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார்   கைது செய்துள்ளனர்.