நீலகிரி:
மசினகுடியில் புலி தாக்கி இறந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்று அமைச்சர் கா.ராமசந்திரன் உறுதி அளித்துள்ளார்.
புலியை உயிருடன் பிடிக்க முடிவு செய்துள்ளதாக வனத்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா தேவன் பண்ணைத்தோட்டம் பகுதியில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மாடு மேய்க்கச் சென்ற சந்திரன் என்பவரைப் புலி தாக்கிக் கொன்றது.
அதைத்தொடர்ந்து புலியைப் பிடிக்க வலியுறுத்தி தேவர் சோலை பஜாரில் தொடர் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தைத் தொடர்ந்து வனத்துறை புலியைப் பிடிக்கும் நட வடிக்கையில் இறங்கியது. கூண்டு வைத்தும் மயக்க ஊசி செலுத்தியும் பிடித்துக் கொண்டு செல்வதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேலையில், புலி அங்கிருந்து மேபீல்டு பண்ணைத்தோட்டம் பகுதிக்குச் சென்று விட்டது.
அங்கு ஒரு மாட்டையும் கொன்றுவிட்டது. இதையடுத்து வனத்துறை குழு மேபீல்டு பகுதிக்குச் சென்று கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தேடுதல் வேட்டை 9வது நாளாக இன்று தொடர்கிறது. இந்த தேடுதல் வேட்டையில் ஒரு நாட்டு நாய், 2 கும்கி யானைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
புலியை உயிருடன் பிடிக்க முடிவு செய்துள்ளதாக வனத்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மசினகுடியில் புலி தாக்கி இறந்த ஆதிவாசி மங்கள பசுவன் குடும்பத்தினரைத் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புலி தாக்கி இறந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.