திருச்சி; மக்களுக்காகத்தான் அரசு! அதை உறுதிப்படுத்த நான் மேற்கொள்ளும் ஆய்வுகள் தொடரும் என முதலமைச்சர் ஸ்டாலின் டிவிட் பதிவிட்டு உள்ளார்.

திருச்சி உள்பட டெல்டா மாவட்டத்துக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.  இன்று (30/05/2022) மதியம் திருச்சி மாவட்டத்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர், திருச்சி மாநகராட்சி அலுவலகத்திற்குச் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும், மாநகராட்சி மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

தனது ஆய்வு குறித்து டிவிட் பதிவிட்டுள்ள  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மக்களுக்காகத்தான் அரசு. மக்களை மையப்படுத்தி இயங்குவது தான் நல்லரசு! அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளை நாடி வரும் மக்கள் மனநிறைவுடன் திரும்பிச் செல்லும் வகையில் பணியாற்ற வேண்டியது அரசின் அங்கமாக இருக்கும் ஒவ்வொருவரின் கடமை. அதை உறுதிப்படுத்த நான் மேற்கொள்ளும் ஆய்வுகள் தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.