சேலம்,

மிழகத்தில் தமிழக அரசு மூலம் ரேஷன் பொருட்கள் வாங்க ஸ்மார்டு கார்டு கொடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு  அவசர கதியில் வழங்கிய ஸ்மார்ட் கார்டால் பல இடங்களில் குழப்பம் நிலவி வருகிறது.

சேலம் பகுதியில் வழங்கப்பட்டுள்ள ஸ்மார்டு கார்டில், குடும்ப தலைவர் படம் இடம்பெற வேண்டிய இடத்தில் நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படம் பதியப்பட்டிருந்து. இது பெரும் பரபரப்பையும் சர்ச்சையும் ஏற்படுத்தி உள்ளது.

தமிழக உணவுபொருள் துறை அமைச்சர் காமராஜ் இந்த மாதம் 1ந்தேதி முதல்  ஸ்மார்ட் கார்டு மூலம் பொருட்கள் வாங்கலாம் என அறிவித்திருந்தார்.

ஆனால், தமிழக அரசு வழங்கியுள்ள  பெரும்பாலான ஸ்மார்ட் கார்டுகளில் பல்வேறு பிழைகள் இருப்பதாக ஆயிரக்கணக்கான புகார்கள் குவிந்துள்ளன.  கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அட்ரஸ் மட்டும் குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் பதியப்பட்டுள்ளன என்றும், தற்போதைய விவரங்கள் ஏதும் இல்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

அதற்கு மேலும் அச்சாரம் போடுவதுபோல,  சேலத்தில் வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் ரேஷன் கார்டில் இடம்பெற வேண்டிய  67 வயது மூதாட்டியின் புகைப்படத்துக்கு  பதில் நடிகை காஜல் அகர்வாலின் படத்தை அச்சிட்டு ஸ்மார்ட் ரேசன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவரது பிறந்த தேதியும் தவறுதாக பதியப்பட்டுள்ளது.

இந்தை கார்டை பார்த்த அந்த மூதாட்டி கடும் அதிர்ச்சிக்கு ஆளானார். இதைக்கண்ட அந்த பகுதி மக்களும், அரசு மற்றும் அரசு அரசு ஊழியர்களின் ஏனோதானோ என்ற போக்கினால் இதுபோன்ற ஒரு பிழை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து உடடினயாக ரேஷன் கடைக்கு சென்ற அந்த மூதாட்டி, தனக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்குமா என்று வினவியுள்ளார். அதைத்தொடர்ந்து, விரைவில் வேறு கார்டு தருவதாக ரேஷன் கடை ஊழியர்கள் கூறி உள்ளனர்.

தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் போலி ரேஷன் கார்டுகள் மூலம் கொள்ளை போவதை தடுக்கவே,ஸ்மார்டு கொண்டு வருவதாக மறைந்த  முதல்வர் ஜெயலலிதா சில ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்து, கடந்த 2016ம் ஆண்டு அதற்கான நிதியும் ஒதுக்கி இருந்தார்.

அதைத்தொடர்ந்தே புகைப்பட அடையாளத்துடன் கூடிய ஸ்மார்ட் ரேசன் கார்டுகள் அரசால் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஸ்மார்ட் கார்டில் பல்வேறு எழுத்து பிழைகள் உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது புகைப்படமே மாறி நடிகை ஒருவரின் படம் அச்சிடப்பட்டு வெளியாகி இருப்பது அதிகாரிகளின் அலட்சியம் குறித்து பொதுமக்களிடையே கடும் அதிருப்தி நிலவி வருகிறது.

சமீபத்தில் இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் காமராஜ்,  சுமார்  2 லட்சம் கார்டுகளில் பிழைகள் இருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.