வாழப்பாடி இராம. சுகந்தன்

சென்னை :

 

செப்டம்பர் 13 ம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்திருக்கும் மத்திய அரசு மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு ஏற்பட்டிருக்கும் அச்சத்தை போக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று நாடு முழுவதும் கேள்வி எழுந்து வருகிறது.

அதேவேளையில், தமிழக அரசும் இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

2019 ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கொரோனா  வைரஸ் தோன்றி இவ்வாண்டு ஜனவரி முதல் உலகம் முழுக்க பரவத்தொடங்கிய இந்த தொற்று நோய் குறித்து எச்சரித்து முறையான நடவடிக்கையை எடுக்க வலியுறுத்து வரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நீட் விவகாரத்தில் மாணவர்களின் நலன் கருதி நீட் மற்றும் ஜெ.இ.இ தேர்வுகளை    ஒத்திவைக்க வேண்டும் என்று கூறிவருகிறார்.

பதினைந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களின் அனுமதிச் சீட்டை இரண்டு நாட்களில்  தரவிறக்கம் செய்திருப்பதால் மாணவர்கள் ஆர்வமுடன் இருக்கிறார்கள் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியிருக்கிறார்.

தேர்வுக்கு பதினான்கு நாட்களுக்கு முன் எங்கு சென்றார்கள் என்ற விவரத்தை மாணவர்களிடம் கேட்கும் தேர்வு முகமை. இன்றிலிருந்து சரியாக பதினைந்து நாட்கள் கழித்து தேர்வு நடக்க இருப்பதால், சிகிச்சை முகாம்களாகச் செயல்பட்டு வந்த பள்ளி கல்லூரி மையங்கள் எத்தனை நாட்களுக்கு முன் காலி செய்யப்பட்டு தேர்வு மையமாக மாற்றப்பட்டது என்றும் தேர்வு மையங்களாக மாற்றப்படுவதற்கு முன் முறையான பராமரிப்பு செய்யப்பட்டதா என்பது குறித்தும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் அச்சத்தைப் போக்கும் விதமாக விளக்கம் தருமா ?

இதேபோல், சரியான திட்டமிடல் மற்றும் மேற்பார்வை இல்லாமல் கடந்த மார்ச் 24 ம் தேதி தமிழகத்தின் பின்தங்கியப் பகுதிகளில் போக்குவரத்து இல்லாமல் 35,000 க்கும் மேற்பட்ட பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டு அவர்களின் எதிர்காலம் இன்று வரை விடை தெரியாத கேள்விக்குறியாகவே உள்ளது.

நீட் தேர்வுக்கு ஆதரவளித்துவரும் தமிழக அரசு, முடக்கி வைத்திருக்கும் பொதுப்போக்குவரத்தை மீண்டும் எப்பொழுது செயல்படுத்தப் போகிறது என்பதை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்குத் தெளிவுபடுத்துமா ?

மேலும், ஞாயிற்றுக்  கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப் படுவதால் நீட் தேர்வு நடக்க இருக்கும் செப்டம்பர் 13 ம் தேதி ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கில் இருந்து தளர்வு கிடைக்குமா ?

அதுமட்டுமல்ல, செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் தொற்று நோய் உச்சமடையும் என்று கூறிய தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப்பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர். சுதா சேஷையன் நீட் தேர்வு நடத்துவது  குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்கினாரா அல்லது அரசு அவரின் ஆலோசனையை பெற்றதா என்பதையும் தெளிவுபடுத்தவேண்டும்.

சீனாவில் முதலில் தோன்றிய போதே எச்சரித்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் பேச்சை உதாசீனப்படுத்திய மத்திய அரசு தற்போது அதன் செயலற்ற தன்மைக்கு இறைவன் மீது பழிபோட்டு தப்பித்துக் கொள்ளப்பார்க்கிறது, நாளை மாணவர்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தாலும் எல்லாம் அவன் செயல் எங்கள் செயல் எதுவும் இல்லையென்று ஒதுங்கிவிடுவார்களா ?

மத்திய அரசு எடுக்கும் எந்த ஒரு நடவடிக்கைக்கும் தலையாட்டி பொம்மையை செயல்படும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசும் மத்திய அரசின் வழியில் மாணவர்களின் நலனைப் புறக்கணிக்குமா ?

மாணவர்கள் தங்கள் தேர்வுக்கு எப்படி திட்டமிட வேண்டும் என்று வகுப்பெடுக்கும் மோடி முதலான  அரசியல் தலைவர்கள், மாணவர்களின் உடல்நலத்தையும் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு நீட் மற்றும் ஜெ.இ.இ தேர்வுகளை தள்ளிவைக்கும் முடிவை உடனடியாக அறிவிக்கவேண்டும்.