சென்னை:

மிழகத்தில் செயல்பட்டு வரும் தனியார் மற்றும் அரசு முதியோர் காப்பகங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

நவீன டிஜிட்டல் உலகில் முதியோர்கள் அனாதைகளாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக புற்றீசல் போல பல இடங்களில் முதியோர் இல்லங்கள், முதியோர் காப்பங்கள் பெருகி வருகின்றன.  பிள்ளைகளால் அனாதைகளாக விடுப்படும் பல முதியோர்கள் காப்பங்களில் தஞ்சமடைந்து கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  கோவையில் செயல்பட்டு வரம் தனியார் முதியோர் இல்லத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும், அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், சென்னை உயர்நீதி மன்றத்தில் சிவராமன் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை இன்று நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கார்த்திகேயன்  அமர்வு முன்பு நடைபெற்றது.

அப்போது தமிழக தமிழகச் சமூகநலத்துறைச் செயலர் மணிவாசன் இதுகுறித்த அறிக்கை தாக்கல் செய்தார். அதில் தமிழகத்தில் 144 அரசு முதியோர் இல்லங்களும், 133 தனியார் இல்லங்களும் உள்ளதாகவும், . முதியோர் இல்லங்களைப் பராமரிப்பது குறித்த அரசாணையைக் கண்டிப்புடன் பின்பற்றக் காப்பகங்களுக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

‘மேலும்,  முதியோர் இல்லங்களை மாவட்டக் குழுக்கள் ஆய்வுசெய்யவும், பதிவுசெய்யாத இல்லங்களை மூடவும் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களின் குறைகளைக் கேட்பதற்காக 81 தீர்ப்பாயங்கள் அமைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசின் அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், விரிவான விளக்கம் தேவை என குறிப்பிட்டனர். அதைத்தொடர்ந்து, மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் முதியோர் இல்லங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களும், கோவையில் உள்ள முதியோர் இல்லங்களைச் சமூக நலத்துறைச் செயலரும் நேரில் ஆய்வு செய்து மார்ச் 19ந்தேதி  விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்  நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.