தஞ்சை:
படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவு அளிக்கும் விசயத்தில் முன்னோடியாக இருப்பது தமிழ்நாடு. ஆனால் இங்கே ஒரு கல்லூரி மாணவர்கள், “சாப்பாட்டுக்கு பணம் கட்டிட்டோம்.. ஆனால் உணவின்றி பசியில் தவிக்கிறோம்” என்று போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள்.
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில்தான் இந்த கொடுமை நடந்திருக்கிறது.
நாம் மாணவர்கள் சிலரிடம் பேசினோம்.
“எங்கள் ல்லூரியில் சுமார் ஆயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்களில் சுமார் எழுநூறு மாணவர்கள் கல்லூரி விடுதியில் தங்கியிருக்கிறோம். .
ஏற்கெனவே ஒருவர் கேன்டீன் காண்டிராக்ட் எடுத்திருந்தார். அப்போது உணவு மிக மோசமாக இருந்தது. இட்லி, சப்பாத்தியில் துர்நாற்றம் வீசும். சாம்பார், ரசம் போன்றவையும் தரமாக இருக்காது. அரிசியும் மிக மோசமாக இருக்கும். ஆகவே, கேன்டீன் காண்ட்ராக்ட்டை மாற்ற வேண்டும் என்று பலமுறை ஸ்டிரைக் செய்தோம். இதையடுத்து கேன்டீன் காண்ட்ராக்டை,கல்லூரி நிர்வாகம் மாற்றியது.
இதனால் ஆத்திரமான முன்னாள் கேன்டீன் காண்டிராக்டர், கேன்டீனை பூட்டிவிட்டுச் சென்றுவிட்டார். அதோடு, மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துவிட்டார்.
இதனால் கேன்டீனில் சமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. மாணவர்கள் பசியால் துடித்தோம். தயிர் சாதம் போன்றவற்றை வெளியில் இருந்து வாங்கிக்கொடுத்தது கல்லூரி நிர்வாகம். பிறகு, புதிய கான்டிராக்டர் வெளியில் வைத்து சமைத்துக் கொடுத்தார். மதிய சாப்பாடு மூன்று மணிக்குதான் அவரால் தர முடிந்தது. இதனால் பசி ஒருபுறம், வகுப்பு நேரத்தில் சாப்பிட வருவது ஒருபுறம் என்று எங்கள் படிப்பு பாழாகிறது” என்றார்கள் வேதனையுடன்.
இது குறித்து கல்லூரி தரப்பில் கேட்டபோது, “பிரச்சினை பெரிதானதால் தாசில்தார் நேற்று வந்தார். முன்னாள் கான்டிராக்டர் கோர்ட்டில் வழக்கு தொடுத்திருப்பதால், அவர்
பூட்டிச்சென்ற கான்டீனை நாம் திறப்பது சரியாக இருக்காது என்று கூறினார். ஆகவே அவசரத்துக்கு வெளியில் இருந்து உணவு வாங்கி மாணவர்களுக்கு அளித்தோம். பிறகு புதிய காண்டிராக்டர், மிகுந்த சிரமப்பட்டு திறந்தவெளியில் உணவு சமைத்து மாணவர்களுக்கு அளித்தார். அதனால் தாமதமாகிறது” என்றனர்.
கல்லூரி முதல்வர் லட்சுமணபெருமாளை தொடர்புகொண்டு பேசினோம். அவர், “மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு மதுரை உயர்நீதிமன்றம் இதை அவசர வழக்காக எடுத்துக்கொண்டிருக்கிறது. இன்று காலை பத்து முப்பது மணிக்கு விசாரணை. நல்ல தீர்ப்பு கிடைக்கும். மாணவர்களின் பிரச்சினை தீரும் என்று நம்புகிறோம். இதற்கு மேல் இப்போது பேசுவது சரியாக இருக்காது” என்றார்.