டில்லி,
ரசு ஊழியர்களுக்கு சம்பளம் பணமாக கிடையாது வங்கிகள் மூலம்தான் பணம் பெற முடியும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.
கடந்த 8ந்தேதி பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்ததை தொடர்ந்து நாடு முழுவதும் பணத்தட்டுபாடு அதிகரித்து உள்ளது. 15 நாட்களை கடந்தும் இன்னும் சரியானபடி பணம் புழக்கத்திற்கு வராததால் மக்கள் பெரிதும் அல்லோலப்பட்டு வருகின்றனர்.
அன்றாட செலவுக்கே தேவையான பணம் கிடைக்காததால் ஏழை எளிய மக்கள் இன்றுவரை வங்கிகளின் வாயிலில் காத்து கிடக்கிறார்கள். தற்போது மாதத்தின் இறுதி வாரம் என்பதால், அரசு ஊழியர்களும் சம்பள பணத்தை எதிர்பார்த்து உள்ளனர்.
தற்போது ஏற்பட்டுள்ள பணப்பிரச்சினையால், தங்களுக்கு பணம் ரொக்கமாக தரப்படுமா? என்று எதிர்பார்த்து இருக்கிறார்கள். ஆனால், பணம் ரொக்கமாக தரமுடியாது என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
sakthi
இதுகுறித்து, மத்திய அரசின் பொருளாதார விவகாரத்துறையின் செயலாளர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது,
‘அரசு அலுவலகங்கள் மின்னனு முறையில் மட்டும்  பணப் பரிவர்த்தனை செய்ய வேண்டும். அதன்படி வரும் 1ந் தேதி அரசு ஊழியர்களுக்கு ரொக்க பணமாக ஊதியம் வழங்கப்படாது.
ஏடிஎம் கார்டு பயன்படுத்துவோருக்கான சேவைக்கட்டணம் டிசம்பர் 31 வரை கிடையாது. மொபைல் பரிவர்த்தனைகளுக்கும் சேவை கட்டணம் இல்லை’, என்று தெரிவித்துள்ளார். மேலும், நாடு முழுவதும் 82,000 ஏ.டி.எம்கள் புதிய ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இன்னும், சில நாட்களில் அனைத்து ஏ.டி.எம்களும் மாற்றியமைக்கப்பட்டு, செயல்பாட்டுக்கும் வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதன் காரணமாக அடுத்த வாரம் வங்கிகளிலும், ஏடிஎம் முன்பும்  மக்களின் கூட்டம் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியோ அரசு ஊழியர்களுக்கான மாதச் சம்பளத்தின் ஒரு பகுதி, ரொக்கமாக அளிக்கப்படும் என அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.