சென்னை: துப்புரவு பணியை தனியாருக்கு தாரை வார்த்தை கண்டித்து, கடந்த 3 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்கள் தங்களது போராட்டங்களை தீவிரப்படுத்தி உள்ளனர். மற்றொருபுறம் சமவேலைக்கு சம ஊதியம் என கோரி, ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், சென்னை காவல்துறையினர் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

திமுக அரசு, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால், அரசுக்கு எதிராக பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். ஏற்கனவே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களான ஜாக்டோ ஜியோ ஜனவரி 6ந்தேதி முதல் காலவரையற்ற போராத்தை அறிவித்துள்ளது. இதற்கிடையில் கடந்த ஒரு மாதமாக செவிலியர்கள் போராட்டம் நடைபெற்றது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்களை கைது செய்வதில் காவல்துறையினர் கவனம் செலுத்தினர். பின்னர், அவர்களின் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், அவர்களின் கோரிக்கையை ஏற்பதாக அரசு அறிவித்துள்ளது. இதனால், அவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

இதற்கிடையில், திமுக அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என கூறி, பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அவர்கள் தினசரி ஒரு பகுதியில் போராட்டம் நடத்தி, போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்து வருகின்றனர். அவர்களை கைது செய்ய காவல்துறையினர் மெனக்கெடுகின்றனர்.
இந்த பரபரப்புக்கு மத்தியில், சென்னையில் தூய்மை பணியை தனியாருக்கு கொடுத்ததை எதிர்த்து, தூண்மை பணியாளர்கள் கடந்த சில மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் முன்னறிவுப்பு இன்றி திடீர் திடீர் என முக்கிய பகுதிகளில் போராட்டம் நடத்தி சென்னையை அதகளப்படுத்தி வருகின்றனர்.
தொடர்ந்து ஆங்காங்கே அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தால், காவல்துறையினர் கடுமையான நெருக்கடிகளுக்கும், மனஉளைச்சலுக்கும் ஆளாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆட்சியாளர்களின் தேவைக்காக தங்களை மனிதாபிமானமின்றி நடந்துகொள்ளவும், போராட்டங்களை ஒடுக்கவும் பலவந்தப்படுத்தப் படுவதாக கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று (டிசம்பர் 30ந்தேதி, தூய்மை பணியாளர்கள் காலை, சென்னை ரிப்பன் மாளிகை முன்பாக போராட்டம் நடத்தினர். அவர்களை காவல்துறையினர் கைது செய்து, மாலையில் விடுதலை செய்த நிலையில், அவர்கள் மதிய வேளையில் தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதேவேளையில் ஒரு தரப்பு, தற்போது மெரீனா கடற்கரையிலுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் அமர்ந்து 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் நள்ளிரவில் ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டனர். . நள்ளிரவையும் பொருட்படுத்தாமல் பணியாளர்கள் அங்கேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் காவல்துறையினர் கடுமையாக அவதிப்பட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் தமிழக அரசு மற்றும் மாநகராட்சிக்கு எதிராக ஆவேசமாக முழக்கமிட்டனர். குறிப்பாக, “இதுதானா சமூக நீதி? இதுதானா திராவிட மாடல்?” என அவர்கள் எழுப்பிய முழக்கங்கள் மாநகராட்சி வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தின.
தற்போது நடைபெற்று வரும் இந்தப் போராட்டம் இன்று நேற்று தொடங்கியதல்ல. கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்கனவே 10 நாட்கள் தொடர் போராட்டம் நடைபெற்றது. தற்போது பல்வேறு கட்டங்களாக இவர்களது போராட்டம் 100 நாட்களைக் கடந்து நீடித்து வருகிறது.
இரவு முழுவதும் பணியாளர்கள் கலைந்து செல்லாமல் ரிப்பன் மாளிகை முன்பே முகாமிட்டதால், அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. தங்களது வாழ்வாதாரக் கோரிக்கைகள் நிறைவேறும் வரை பின்வாங்கப் போவதில்லை என்பதில் பணியாளர்கள் உறுதியாக உள்ளனர்.
சென்னையில் போராட்டக்குழுவினர் திடீர் திடீரென சாலைகளில் அமர்ந்து மறியல் செய்வதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் பணிக்கு செல்லும் பலர் கடும் சிரமங்களுக்கு ஆளாகின்றனர்.
[youtube-feed feed=1]