சென்னை: அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு அரசாணையை அமல்படுத்தக் கோரி சென்னையில் நாளை அரசு மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் மருத்துவ சேவைகள் முடங்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் வைத்து, அரசு மருத்துவர்கள் நாளை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ன்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் கடந்த இரு ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 118 மருத்துவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இருந்தாலும், அவ்வப்போது அரசு மருத்துவர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.
பின்னர் கடந்த 2022ம் ஆண்ட செப்டம்பர் 28ந்தேதி அன்று சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில், 50-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். இதுதொடர்பாக அரசியல் கட்சிகளும் மாநில அரசை வலியுறுத்தி வந்தன. அரசு மருத்துவர்களை போராட வைத்து, வேடிக்கை பார்ப்பது நியாயமில்லை. அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என கூறின.
இந்த நிலையில், அரசு மருத்துவர்கள் மீண்டும் போராட்டத்தை கையிலெடுத்துள்ளனர். ஊதிய உயர்வு அரசாணையை அமல்படுத்தக் கோரிசென்னையில் நாளை சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அரசு மருத்துவர்களின் போராட்டம் காரணமாக சென்னையில் மருத்துவ சேவை முடங்க வாய்ப்பு உள்ளது.