சென்னை: சென்னை விமான நிலையம், அருகே அரசு மாநகர பேருந்து பிரேக் பிடிக்காததால், சிக்னலில்நின்ற கொண்டிருந்த கார்களின் மீது மோதி விபத்துக்குள்ளானது.  அடுத்தடுத்த 6 கார்கள் மீது மோதிய விபத்தில் இளம்பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.

தமிழ்நாட்டில் இயக்கப்பட்டு வரும் அரசு பேருந்துகளின் அவலம் அனைவரும் அறிந்தது. ஏற்கனவே வருமான மின்றி தள்ளாடும் போக்குவரத்துதுறை, அரசு பேருந்துகளை முறையாக பராமரிக்காமல் இயக்குவதால், அடிக்கடி விபத்துக்குள்ளாகும் நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் மாநகர பேருந்து ஒன்று அடுத்தடுத்து 6 கார்களில் மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளது.  இன்று காலை போக்குவரத்து நெரிசல் மிக்க  சென்னை மீனம்பாக்கம் ஜி.எஸ்.டி சாலையில்  போக்குவரத்து நெரிசல்  காரணமாக சாலையில்  நின்று கொண்டிருந்த கார்கள் மீது அதி வேகமாக வந்த மாநகர அரசு பேருந்து ஒன்று திடீரென மோதி விபத்து ஏற்படுத்தி உள்ளது.

இதில் பேருந்தின் முன்பகுதி சேதமடைந்ததுடன்,  பேருந்து மோதியதால்,  ஆறு கார்களின் முன் பகுதி மற்றும் பின் பகுதிகள் சேதம் அடைந்துள்ளன.  மேலும், பேருந்து மோதியதில் காரில் பயணம் செய்த பெண் ஐடி ஊழியர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காரில் வந்தவர்கள், பொதுமக்கள் என அனைவரும் மாநகர பேருந்து டிரைவரை சூழந்து தாக்க முயன்றனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசார் பேருந்து ஓட்டுனரை பத்திரமாக அழைத்துச்சென்றதுடன், இந்த சம்பவம் குறித்து  பேருந்து ஓட்டுநர் மற்றும் கார் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில்,  பேருந்து ஓட்டுநர் சாலையில் சிக்னல் போட்டதை கவனிக்காமல் அதிவேகமாக வந்ததாகவும்,  மேலும் சிக்னல் விழுந்ததும் பிரேக்கை பிடிக்க முயன்றும், அது வேலை செய்யாததால்,   சிக்னலில் நின்றுகொண்டிருந்த  கார்கள் மீது மோதி விட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விபத்து தொடர்பாக அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போக்குவரத்து புலனாய்வு போலீசார் யார் மீது தவறு என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் ஓடும் அரசு பேருந்துகளின் அவல நிலை இதுபோன்ற சம்பவங்களால் வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கிறது.

ஓடும் பஸ்ஸில் இருக்கை கழன்று சாலையில் தூக்கி வீசப்பட்ட நடத்துனர்! அரசு பேருந்தின் அவலம்