“ஆட்சி மாற்றம்.. கார்டன் இல்லத்தில் எமன்” நியூஸ்பாண்ட் சொல்லும் அதிர்ச்சி தகவல்கள்

Must read

சிறிது இடைவெளிக்குப் பிறகு அலுவலகம் வந்த நியூஸ்பாண்ட் முகத்தை உம்மென்று வைத்திருந்தார்.
“என்ன கோபமோ” என்று கேட்டபடியே அவருக்குப் பிடிதத சுக்கு, வெல்லம் போட்ட லெமன் டீ கொடுத்தோம்.
கொஞ்சம் கோபம் குறைந்து வாங்கியவர், “நிறைய செய்திகள் தந்தும்,  என் பெயர் போடாமல் பிரசுரிக்கிறீர். நான் செய்தி தருவதில்லையோ என் ரசிகர்கள் வருத்தப்படுகிறார்கள்” என்றார் நியூஸ்.
“வாட்ஸ்அப், மெயிலி்ல் நீர் அனுப்பும் செய்திகளைத்தான் அப்படி பிரசுரிக்கிறோம்.  இனி அடிக்கடி நேரில் வாரும். உமது செய்திகளாகவே வெளியாகும்…” என்ற நாம், “நல்லவேளை.. உம்மைக் காணவில்லை என்று உமது ரசிகர்கள் யாரும் விபரீதமாக ஏதும் செய்துகொள்ளவில்லை..” என்று சொன்னோம்.
டக்கென்று சிரித்த நியூஸ்பாண்ட், “சரி விடும். செய்திகளுக்கு வருவோம். தற்போது மிக முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறது அரசியல். மறைமுக பேச்சுக்கள், மர்மமான தூதுகள் நடந்தவண்ணம் இருக்கின்றன. ஆட்சி மாற்றம் வருமோ என்கிற சந்தேகம் பலருக்கு இருக்கிறது..”
என்றார்.
0
“ஏன்ன சொல்கிறீர்? முக்கிய பதவியில் மாற்றமா, ஆட்சி மாற்றமா?”
“ஆட்சி மாற்றம்தான் என்கிறார்கள். என் காதுக்கு வரும் செய்திகளை கொட்டிவிடுகிறேன். எதை எடுப்பது, எதை தொடுப்பது, எதை நீக்குவது என்று நீரே முடிவு செய்துகொள்ளும்!”
“சொல்லும்.. சொல்லும்!”
“முக்கியமானவரின் உடல் நிலை குறித்த பலவித யூகச் செய்திகள் பரவி ஒருவித டென்சனை ஏற்படுத்தியிருக்கின்றன. மருத்துவமனையில் நீண்ட காலம் இருக்க வேண்டிவரும் என்று மருத்துவ வட்டாரமே சொல்லிவிட்டது. இந்த நிலையில் ஆட்சியைக் கைப்பற்ற இன்னொரு முக்கிய கட்சி காய் நகர்த்துவதாகச் சொல்கிறார்கள்!”
“என்னது.. உண்மையாகவா?”
“என் கடன், காதில் விழுவதை உம்மிடம் கொட்டுவதே..”
“மேலே சொல்லும்!”
“ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஒருவித பதட்டமான – குழப்பமான நிலையில் இருக்கிறார்கள். தங்கள் தலைமையின் உடல் நலம் எப்படி இருக்கிறது.. எப்போது அவர் முழு உடல் நலன் பெற்று வருவார் என்ற கவலை அவருக்கு. ஏனென்றால் தற்போது சின்னம்மாவின்  ஆதிக்கம்தான் கட்சியில் முழுமையாக இருப்பதாக அவர்களில் பலர் புலம்புகறார்கள்..”
“ஏற்கெனவே அப்படித்தானே..”
“ஆமாம். ஆனால் முன்பெல்லாம் மூச்சுவிடவாவது சுதந்திரம் இருக்குமாம். இப்போது அதுவும் இல்லையே.. என்பதுதான் அவர்கள் ஆதங்கம்..!”
“அப்படி என்ன பிரச்சினை..?”
“அதை பிறகு சொல்கிறேன். இப்போது அதிருப்தியில் இருக்கும் உறுப்பினர்களை, இன்னொரு பிரதான கட்சி இழுக்க முயன்று வருகிறது. ஆளும் தரப்பிலிருந்து வலகிய டில்லி பதவிக்காரர் இருக்கிறாரே…”
“ம்… பூ, புஷ்பம்….”
“ஆம்.. அவர் மூலமாக கணிசமான உறுப்பினர்களை இழுக்க முயற்சி செய்யப்பட்டதாம் வரும் உறுப்பினர்களை வைத்து தனி அணி உருவாக்கலாம். அந்த அணியின் ஆதரவுடன் தாங்கள் ஆட்சி அமைக்கலாம் என்பது திட்டமாம். இதற்கு அந்த சர்ச்சை பூக்காரரின் ஸ்பொன்சாரான வைகுண்டமானவரும் ஓகே சொல்லியிருக்கிறார்..”
“ஓ…”
“ஆமாம்.. ஆனால் சர்ச்சை பூவை நம்பி வர யாரும் தயாராக இல்லை.. ஆகவே அந்தத் திட்டம் தோல்வியடைந்தது.”
“அப்புறம்..?”
“அந்த இன்னொரு பிரதான கட்சியின் தகப்பனாரும், மகனாரும் நாமே நேரடியாக களம் இறங்கலாம் என்று தீர்மானித்தார்களாம். இதையடுத்து மகனாரின் மருமகனார், ஆளும் உறுப்பினர்களுக்கு வலை விரித்திருக்கிறார். உறுப்பினர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, எட்டு முதல் பத்து வரை அன்பளிக்கப்படும் என்று உறுதி சொல்லப்பட்டிருக்கிறதாம்!”
“குதிரை பேரம் ஆரம்பமாகிவிட்டது என்று சொல்லும்!”
“நரி பேரம் என்றும் சொல்லலாம்” – நியூஸ்பாண்ட் சொல்லி சிரிக்க, நாமும் சிரித்தோம். பிறகு அவரே தொடர்ந்தார்:
“இந்த இடத்தில் உமது மனதில் ஒரு கேள்வி வந்திருக்க வேண்டுமே. குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடித்தால் மக்களிடம் அதிருப்தி ஏற்படாதா என்று!”
“ஸாரி… ஏனோ தோன்றவிலல்லை. நீரே சொல்லும்!”
“இது குறித்தும் அந்த பிராதன கட்சியின் மகனார் கேட்டிருக்கிறார். அதற்கு தகப்பனார், பக்கத்து மாநில  சம்பவத்தைச் சொன்னாராம். அங்கு மாமனார் ஆட்சியைக் கவிழ்த்து மருமகன்  ஆட்சியைப் பிடித்தார். மக்களிடம் நீதி கேட்டு நடந்தார் மாமனார்.  ஆனால் பின்னாட்களில் சந்திரபாபுதானே கோலோச்சினார்.. இப்போதும் அவர் செல்வாக்குடன்தானே இருக்கிறார்.. என்று மகனார் சொன்னாராம்!”
“அப்படிப்போடு..!”
“மேலும் தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. அதற்குள் மக்கள் மனது மாறிவிடும். தவிர நமக்கு இன்னும் சாதகமான சூழல் ஏற்படலாம் என்றாராம்”
“ஓ.! எவ்வளவு விலை பேசப்படுகிறதாம்..”
“பத்து முதல் பன்னிரண்டு வரை அவரவர் ஆசைக்கேற்ப  சொல்லப்பட்டிருக்கிறதாம். இதையடுத்து சிலர் அட்வான்ஸும் வாங்கிவிட்டார்களாம். அவர்களில் மேற்கு மாவட்ட உறுப்பினர் ஒருவர், தென் மாவட்ட உறுப்பினர்கள் இருவரைச் சொல்கிறார்கள்!”
“அட! அது சரி, மத்தியில் பொறுப்பில் இருப்பவர்கள் இது குறித்து என்ன நினைக்கிறார்களாம்”
“இப்போது உள்ள சூழலைப் பயன்படுத்தி தங்களுக்குச் சாதகமான ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை பொறுப்புக்கு கொண்டுவர காய் நகர்த்தினார்கள். அந்த அதிகாரி, தற்போது உடல் நலம் இல்லாமலிருக்கும் முக்கியமானவருகுக்கும் நெருக்கமானவர்தான். ஆனால் அந்த அதிகாரி அதற்கு உடன்படவில்லை. தவிர சின்னம்மாவும் உடன்படவில்லை.
ஆகவே, தற்போது அந்த இன்னொரு முக்கிய கட்சி எடுக்கும் நடவடிக்கையை வேடிக்கை பார்க்கிறார்கள். தவிர, அக் கட்சி ஆட்சி அமைத்தாலும் தங்களது சாதகமாகவே இருக்கும் என்று நினைக்கிறார்கள்!”
1
“ஆமாம்.. அந்த இன்னொரு கட்சியின் தலைவருக்கு, ஆட்சியில் இருந்தால் போதுமே… எவருக்கும் சாதகமாக இருப்பார்!”
சிரித்த நியூஸ்பாண்ட், “இந்த குதிரை பேரம் குறித்து புரட்சி புயலுக்கு தெரியவர, கொதித்துப் போய்விட்டாராம். அதனால்தான் முக்கியமானவர் நலமாகவே இருக்கிறார் என்று அறிக்கைவிட்டார். மருத்துவமனைக்கும் சென்று பார்த்தார். அதோடு, சட்ட ரீதியாக ஆட்சியில் முதன்மையானவராக இருக்கும் டில்லி பிரதிநிதியையும் சந்தித்தார். குதிரை பேரம் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினாராம்!”
“ஆனால் இது குறித்து செய்தியாளர்களிடம் புரட்சி புயல் பேசவே இல்லையே..”
“இப்போது பேச வேண்டாம் என நினைக்கிறார். தவிர குதிரை பேர தகவல்கள் எட்டியதால்தான் பிரதான தேசிய கட்சியின் துணைத்தலைவர் மருத்துவமனைக்கு வந்தார். அம்மையாருக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம் என்பதுதான் அவரது வருகை சொல்லும் செய்தி!”
“இந்த அளவுக்கு விசயம் போய்க்கொண்டிருக்கிறது. தங்களது உறுப்பினர்களை தக்கவைக்க சின்னம்மா எந்த முயற்சியும் எடுக்கவில்லையா..”
“ஆம். பெரும் முயற்சி எடுத்து வருகிறாராம், தன் கணவர் மூலம்..”
“என்னது.. கணவர் மூலமா..”
“ஆமாம்.. எமன் என்று இனிஷியலை வைதது செல்லமாக அழைக்கப்படும் அவரது கணவரை, முக்கியமானவர் ஒதுக்கி வைத்து பல வருடங்கள் ஆகின்றன. ஆனால் அவர் உடல் நலமில்லாத இந்த சூழலில் பற்பல வருடங்கள் கழித்து கார்டன் இல்லத்துக்கு வந்திருக்கிறார். கடந்த சில நாட்களாக அங்குதான் இருக்கிறார். உறுப்பினர்களிடம் எல்லாம் பேசி வருகிறார்.!”
“என்னது…  முக்கியமானவரின் கார்டன் இல்லத்தில் எமனா…”
“இதற்கே அதிர்ச்சியானால் எப்படி? இன்னும் பல அதிர்ச்சகரமான தகவல்கள் இருக்கின்றன.. அடுத்த முறை சொல்கிறேன்” என்றபடி கிளம்பினார் நியூஸ்பாண்ட்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article