அரசால் தீர்க்க முடியாத பிரச்சனையை எப்படி கையாவது என்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோடியின் பொருளாதார ஆலோசகர் கூறியுள்ளார்.
வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட சமூக, பொருளாதார பிரச்சனைகளை அரசால் தீர்க்க முடியாது என்று இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ILO மற்றும் The Institute for Human Development இணைந்து “இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை 2024: இளைஞர் வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் திறன்கள்” என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டது.
இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அனந்த நாகேஸ்வரன், “அரசாங்கத்தின் தலையீடு ஒவ்வொரு சமூக மற்றும் பொருளாதார சவால்களையும் தீர்க்க முடியும் என்று நினைப்பது தவறானது” என்று பேசினார்.
“இன்றைய வர்த்தக உலகில் வணிகத் துறைதான் வேலையின்மை பிரச்சனையை தீர்க்கமுடியும் அரசாங்கம் என்ன செய்ய முடியும் ?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
சம்பளக் கொடுப்பனவுகளுக்கான கார்ப்பரேட் வருமான வரிச் சலுகைகள் மற்றும் வருங்கால வைப்பு நிதி பங்களிப்புகளுக்கான மானியங்களையும் சுட்டிக்காட்டிய அனந்த நாகேஸ்வரன், “வரிக் குறியீடு மூலதன குவிப்புக்கு சாதகமாக இல்லை அது உண்மையில் வேலைவாய்ப்பை அதிகரிக்கவே சாதகமாக உள்ளது” என்று பேசினார்.
சமீப ஆண்டுகளில் வேலைவாய்ப்பைத் தூண்டுவதற்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளை, திறன் மேம்பாடு போன்றவற்றைப் பட்டியலிட்ட அவர் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், சோ எழுதி இயக்கி ’70களில் வெளியான அரசியல் நையாண்டி திரைப்படமான ‘முகமது பின் துக்ளக்’ படத்தை மேற்கோள்காட்டி பேசிய அனந்த நாகேஸ்வரன், “ஒரு கற்பனையான நாட்டின் பிரதமராக இருக்கும் கதாநாயகன் அரசால் தீர்க்க முடியாத பிரச்சனையை எப்படி கையாவது என்று கூறுவார்.
வேலையில்லாத் திண்டாட்டத்தைத் தீர்க்க வேண்டும் என்று மேடைக்கு மேடை பேசுவேன், அதுவே வேலையில்லாப் பிரச்சனையைத் தீர்ப்பதில் எனது பங்களிப்பு, ஏனென்றால் இது என்னால் முடியாத காரியம்” என்று சோ அந்தப் படத்தில் கூறுவார் அதுபோல் இது அரசால் முடியாத காரியம் என்று பேசினார்.