சென்னை: மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழகஅரசு 7.5 சதவிகிதம் உள்ஒதுக்கீடு கொண்டு வந்துள்ளது. இந்த நிலையில், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், அரசின் உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
நீட் தேர்வு காரணமாக தமிழக மாணவர்கள் மருத்துவம் படிப்பதில் சிக்கல் எழுந்துள்ள நிலையில், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்றால், அவர்கள் மருத்துவம் படிக்கும் வகையில், 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, பெரும் இழுபறிக்கு பின்னர் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக, தமிழகத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துள்ளது.
இந்த நிலையில், அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் பினேகாஸ் மற்றும் அரசு உதவி பெறும் தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி கழகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அவர்களது மனுவில், தங்களது கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணாக்கர்களுக்கும் இடஒதுக்கீட்டின்படி சலுகை வழங்க வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளது. மனுவில், தங்களது கழகத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 2,400 அரசு உதவி பெறும் தமிழ்வழிப் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தங்களுடைய பள்ளிகளுக்கும் அரசுப் பள்ளிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அரசுப் பள்ளிகளுக்கான சலுகைகள், கொள்கைகள், பாடத்திட்டம், போதிக்கும் முறை, உதவிகள் அனைத்தும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் பொருந்தும். அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் சமூகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ மாணவியர் படிப்பதாகவும் , எனவே எங்களது கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணாக்கர்களுககும் மருத்துவம் படிக்க உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. மேலும், 7.5% இடஒதுக்கீட்டை எதிர்த்து தனியார் பள்ளி மாணவி பூஜா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், 7.5% இடஒதுக்கீடு சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்குகள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுப்பையா, சரவணன் அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இன்றைய விசாரணையைத் தொடர்ந்து, மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.