டில்லி: 

ஆதார் அட்டை எண் மற்றும் அதில் இணைக்கப்பட்ட விவரங்கள் இணையதளத்தில் கசிந்தது உண்மையே என்று மத்திய அரசு முதல்முறையாக ஒப்புக் கொண்டுள்ளது. ஆதாரில் பதிவுசெய்யப்படும் தனிநபர்களின் முக்கிய தகவல்கள் திருடப்படலாம் என்றும் அதன் பாதுகாப்பில் நம்பிக்கை இல்லை என்றும் மனித உரிமை அமைப்புகளும், முற்போக்காளர்களும் எச்சரித்தனர்.

ஆனால் இவற்றையெல்லாம்  உதாசீனப்படுத்திய மத்திய அரசு, தகவல்கள் கசிந்துவிடாதபடி பாதுகாப்பாக வைக்கப்படும், அச்சப்படத் தேவையில்லை என்று உறுதி அளித்தது. ஆனால் அதே மத்திய அரசு தற்போது தகவல்கள் கசிந்திருப்பதை பகிரங்கமாக தெரிவித்துள்ளது.

மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் மார்ச் 25ம் தேதி எழுதப்பட்ட கடிதத்தில், ஆதார் தகவல்கள் கசிந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆதார் எண், அந்த நபரின் பெயர், பிறந்த தேதி, வங்கி கணக்கு எண், முகவரி போன்று தனி நபர்களின் விவரங்கள் கசிந்திருப்பது, ஆதார் சட்டம் 2016ன் படி தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த செயலில் ஈடுபட்டவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கலாம் என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலநாட்களுக்கு முன் பிரபல கிரிக்கெட் வீர்ர் தோனியின் ஆதார் தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவின. இதுகுறித்து அவரது மனைவி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார். இச்சம்பவத்தை முன்வைத்து நேற்றுமுன் தினம் நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், ஆதார் அட்டையில் ஒவ்வொருவரின் தகவல் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவற்றை எப்படி பாதுகாக்கப் போகின்றீர் என கேள்வி எழுப்பியது நினைவுகூரத்தக்கது.

மார்ச் 5ம் தேதி மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் எழுதப்பட்ட கடிதத்தில், ஆதார் தகவல்கள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாகவும், ஆதார் தகவல்கள் கசிந்ததாக தவறான தகவல்கள் பரபரப்படுவதாகவும், எந்த ஆதார் தகவலும் கசியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.