இலங்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பொருளாதார வீழ்ச்சி தொடங்கியது.

இதனை அடுத்து 2021 ஆகஸ்ட் முதல் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வந்தது.

 

உணவு பஞ்சம் தலைவிரித்தாடிய நிலையில் சர்வதேச சந்தையில் இலங்கை ரூபாய் மதிப்பு சரிந்ததைத் தொடர்ந்து சமையல் எரிவாயு, பெட்ரோல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணைமுட்டியது.

இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனர், இந்த நிலையில், மார்ச் மாத இறுதியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்ததைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் கொழும்பு நகரில் நிரந்தரமாக கூடாரம் அமைத்து போராட துவங்கினர்.

அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் அவர் மீண்டும் தனது கிராமத்திற்கு திரும்பிச் செல்லவேண்டும் GotaGoGama என்ற கோரிக்கையுடன் போராடி வந்த மக்களுக்கு உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

தொழிற் சங்கத்தினருடன் இணைந்து பொதுமக்களும் போராட்டத்தில் குதித்ததால் போராட்டம் தீவிரம் அடைந்தது இந்த காரணமாக ஏப்ரல் 1 முதல் இலங்கை முழுவதும் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மகிந்த ராஜபக்சே அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்தனர்.

 

பிரதமர் மகிந்த ராஜபக்சே பரிந்துரையின் பெயரில் அதிபர் கோத்தபய ராஜபக்சே நியமித்த புதிய அமைச்சரவையில் ராஜபக்சே குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.

பின்னர், ஏப்ரல் 6 அன்று அவசர நிலை விலக்கிக்கொள்ளப்பட்ட போதும் போராட்டம் ஓய்வதாக இல்லை. அரசுக்கு பெரும் ஆதரவாக இருந்து வந்த பௌத்த மதத்தைச் சார்ந்தவர்களும் போராட்டத்தில் களமிறங்கினர்.

பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகுவார் என்று செய்திகள் கசியவிடப்பட்டது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (மே 6) மீண்டும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

அதே வேளையில், நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் இருந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியைச் சேர்ந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் தலைநகர் கொழும்புவுக்கு படையெடுத்தனர்.

 

மே 9 ம் தேதி மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வார் என்று அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியானதை அடுத்து பிரதமர் இல்லம், அதிபர் மாளிகை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குவிந்திருந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் போராட்டக்காரர்களை தாக்கி கலவரத்தில் ஈடுபட்டனர்.

அமைதியாக போராடி வந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக பொதுமக்கள் களத்தில் குதித்ததால் கொழும்பு நகரில் கலவரம் வெடித்தது, கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

இந்த நிலையில், மகிந்த ராஜபக்சே தனது பதவி விலகல் கடிதத்தை அன்று மாலை அதிபரிடம் வழங்கிய நிலையில் இலங்கை முழுவதும் கலவர பூமியானது.

நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் ராஜபக்சே-வுக்கு சொந்தமான வீடுகள், ஹோட்டல்கள், வாகனங்கள் உள்ளிட்டவை தீவைத்து கொளுத்தப்பட்டன அவரது அமைச்சரவை சகாக்கள் வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டன.

இலங்கை முழுவதும் தீவைப்பு சம்பவங்கள் அனுமார் வால் போல் வளர்ந்துகொண்டு போனதை அடுத்து தலைநகர் கொழும்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசாருடன் ராணுவத்தினரும் களமிறக்கப்பட்டு துப்பாக்கி சூடு நடத்தினர்.

பொது சொத்துக்களை சூறையாடுவோர் மீது கண்டவுடன் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் இந்த நடவடிக்கையால் கொழும்பு நகரில் நேற்று மயான அமைதி நிலவியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று மாலை முதல் மீண்டும் தங்களது கூடாரங்களுக்கு திரும்பியுள்ள போராட்டக்காரர்கள் கோத்தபய ராஜபக்சே பதவி விலகும் வரை போராட்டத்தை தொடர முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.