தெலுங்கானா மாநில பாஜக தலைவர் தேர்தலுக்கு நடந்த மோதலைத் தொடர்ந்து அக்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ராஜா சிங் ராஜினாமா செய்துள்ளார்.
கோஷாமஹால் எம்எல்ஏ ராஜா சிங்-கின் இந்த அறிவிப்பு தெலுங்கானா பாஜக-வில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, இன்று காலை நடைபெற்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வந்த ராஜா சிங் கட்சியின் தேசிய தலைவர்களால் தடுக்கப்பட்டதாகவும் மாநில தலைவராக ராகவேந்திர ராவ் அறிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து கட்சித் தலைவரை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்காமல் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வழங்கிவருவதாக தேசிய தலைமை மீது ராஜா சிங் குற்றம்சாட்டினார்.

இதனைத் தொடர்ந்து, தனது கட்சி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள ராஜா சிங், கோஷாமஹால் தொகுதியில் இருந்து மூன்றாவது முறையாக தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட விடாமல் தன்னை தடுத்த பாஜக நிர்வாகிகளை விமர்சனம் செய்தார்.
மேலும், பாஜக கட்சியில் இருந்து ராஜா சிங் ராஜினாமா செய்துவிட்டதாக சட்டமன்ற சபாநாயகருக்கு அறிவிக்குமாறும் தனது எம்.எல்.ஏ. பதவியை பறிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு மாநில தலைவர் கிஷன் ரெட்டிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ராஜா சிங் எம்.எல்.ஏ., கட்சியில் இருந்து ராஜினாமா செய்வதாக வெளியான அறிவிப்பு அம்மாநில பாஜக-வினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.