சென்னை:
தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி பப்ஜி மதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் ‘பப்ஜி’ விளையாட்டை யூட்யூப் சேனலில் நேரலையாக ஒளிபரப்பி, ஆபாசமாக பேசி பெண்களை கீழ்தரமாக பேசியும் பணம் வசூலித்தார் என்று யூடியூபர் பப்ஜி மதன் மீது புகார் எழுந்தது.
இதனடிப்படையில் கடந்த ஜூன் மாதம் 18-ம் தேதி மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் ஜூன் 18ஆம் தேதி தர்மபுரியில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஏராளமான புகார்கள் வந்ததால், அவரை சைபர் குற்றவாளி எனக் கூறி, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர், ஜூலை 5ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, மதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு, நீதிபதி பி.என்.பிரகாஷ் தலைமையிலான அமர்வில், வரும் திங்கள் கிழமை (ஆகஸ்ட் 9) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.