திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதால் 7 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளன.
நேற்று சென்னை துறைமுகத்தில் இருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒயிட் பீல்டுக்கு 41 பெட்டிகளுடன் சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. நேற்று மாலை 5.30 மணிக்குத் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள கேத்தாண்டப்பட்டி ரயில் நிலையம் பகுதியில் லூப்லைனில் இருந்து மெயின் லைனுக்கு சரக்கு ரயில் மாறியது.
அந்த நேரத்தில் ரயில் என்ஜின் பகுதியில் இருந்து 16-வது பெட்டியின் முன்பக்கச் சக்கரம் ஒன்று தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கி தடம் புரண்டது. அதிக சத்தம் கேட்டு என்ஜின் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தியதால் மற்ற பெட்டிகள் தடம் புரளாமல் தவிர்க்கப்பட்டது.
இந்த தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்த பின்னர் ஹைட்ராலிக் இயந்திரம் மூலம் தடம் புரண்ட சக்கரங்களைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தடம் புரண்ட சக்கரம் சுமார் 2½ மணி நேரம் போராடி இரவு 8 மணிக்கு சீரமைக்கப்பட்டது.
இதனால் சென்னையிலிருந்து கேரள மாநிலம் செல்லும் திருவனந்தபுரம் வாராந்திரச் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில், லால்பாக் எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ் உள்பட 7 ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இந்த ரயில்களில் பயணம் மேற்கொண்ட பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.