லக்னோ:

காங்கிரஸ், பாரதியஜனதா கட்சிகளை எதிர்த்து, உ.பி.யில் கூட்டணி அமைத்து களமிறங்கிய பிஎஸ்பி, சமாஜ்வாதி கட்சிகள் இடையேயான கூட்டணி உறவு முடிவுக்கு வந்துள்ளது.

நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் தனித்து களமிறங்கப்போவதாக மாயாவதி அறிவித்துள்ள நிலையில், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், மாயாவதிக்கு குட்பை, வாழ்த்துக்கள் என தெரிவித்து உள்ளார்.

பல ஆண்டுகளாக மாநிலத்தில் எதிரெதிர் துருவங்களாக இருந்துவந்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவும் லோக்சபா தேர்தலுக்காக கைகோர்த்து போட்டியிட்டனர்.

நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலின்போது உ.பி.யில் மொத்தம் 80 லோக்சபா தொகுதிகளில் 75 தொகுதிகளில் பிஎஸ்பி, எஸ்பி கூட்டணி போட்டியிட்டன. தேர்தல் முடிவில்,  பாஜக 62 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்தது. 38 இடங் களில் போட்டியிட்ட மாயாவதி கட்சி 10 இடங்களையும், 37 இடங்களில் போட்டியிட்ட அகிலேஷ் கட்சி 5 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. இதன் காரணமாக பிஎஸ்பி, எஸ்பி கூட்டணி மக்களிடையே எடுபடாத நிலை தெளிவானது. அகிலேஷின் மனைவி டிம்பிள் மற்றும் மைத்துனர்கள் அக் ஷய் தர்மேந்திரா என மூவருமே படுதோல்வி அடைந்து உள்ளனர்.

இதையடுத்து, தனது கட்சியினருடன் நடத்தி ஆலோசனை கூட்டத்தில் பேசிய மாயாவதி, யாதவ சமுதாய  ஓட்டுக்கள் முழுஅளவில் தங்கள் கூட்டணிக்கு வரவில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும்,தனது மனைவியைகூட வெற்றி பெற வைக்க முடியவில்லை என்று அகிலேஷ்மீது மாயாவதி பகிரங்கமாக குற்றம் சாட்டினார். அத்துடன் நடைபெற உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்தார்.

இதன் காரணமாக இரு கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி முறிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ், மாயாவதியின் முடிவுக்கு வாழ்த்துக்கள் என்று, குட்பை என்று தெரிவித்து உள்ளார்.