மும்‍பை: நல்ல முறையில் தயார் செய்யப்பட்ட பிட்சுகளில் விளையாடுகையில் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் ரசிகர்களை கவர்வதாக அமையும் என்று இந்திய பேட்டிங் புகழ் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

தனது கருத்துக்கான உதாரணமாக அவர் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த ஆஷஸ் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்தின் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருக்கு இடையே நடந்த சுவாரஸ்யமான மற்றும் கடுமையானப் போட்டியை சுட்டிக் காட்டினார்.

“டெஸ்ட் கிரிக்கெட்டின் இதயமே இதுபோன்ற பிட்சுகள்தான். நல்ல பிட்சை உருவாக்கினால், கிரிக்கெட் போட்டியானது பார்ப்பதற் சலிப்பை ஏற்படுத்தாது. பார்ப்பவர்களுக்கு உற்சாக மனநிலையை அளிக்கும். அற்புதமான பேட்டிங் மற்றும் பெளலிங் நிகழ்வுகள் அமையும். இதைத்தான் கிரிக்கெட் ரசிகர்கள் விரும்புகிறார்கள்” என்றார்.

ஆர்ச்சருக்கும் ஸ்மித்திற்கும் இடையிலான சுவாரஸ்ய மோதலில், வீசப்பட்ட ஒரு ஆபத்தான பவுன்சரில் துரதிருஷ்டவசமாக ஸ்மித் காயமடைந்தாலும், அத்தகைய த்ரில்லிங் நிகழ்வுகள் பார்வையாளர்களைக் கவர்கின்றன. இத்தகைய டெஸ்ட் போட்டிகள்தான் பார்வையாளர்களை கவரும் என்றார்.

“இரண்டாவது டெஸ்ட் போட்டி இறுதிநாள் வரை நீடித்தது. இறுதிநாளில் இங்கிலாந்து விக்கெட் எடுத்ததால், ஆஸ்திரேலியா சிரமப்பட்டே டிரா செய்ய வேண்டியிருந்தது” என்று மேலும் கூறினார் டெண்டுல்கர்.