ஹனோய்:

ந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்குமிடையே  நீடித்து வரும் தாக்குதல்கள் மற்றும் போர் பதற்றம் சீராகும், இந்தியா, பாகிஸ்தானிடம் இருந்து நல்ல செய்தி கிடைத்திருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புல்வாமா பயங்கரவாத வெடிகுண்டு  தாக்குதலுக்கு இந்திய விமானப்படை  பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த  பயங்கரவாத அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியது. இதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயும் போர் பதற்றம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில்,  வியட்நாமின் ஹனோய் நகரில் உள்ள ஓட்டலில் அமெரிக்க அதிபர் டிரம்பும், வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன்னும் பொருளாதார தடை குறித்து 2வது முறையாக சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் கூறுகையில், ‘இந்தியா- பாகிஸ்தான் இடையேயான தாக்குதல்கள் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கிறேன். குறிப்பிடத்தகுந்த நல்ல செய்திகள் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிடம் இருந்து வருகிறது. பல ஆண்டுகளாக இந்த பிரச்சனைகள் நீடித்து வருகிறது. நாங்கள் அதை தீர்க்க முயன்று கொண்டு இருக்கிறோம். இவர்களுக்கு இடையில் அமைதியை ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம். அது விரைவில் நடக்க போகிறது. இரு நாடுகளுக்கிடையே சமரசம் ஏற்பட்டு நிலவும் பதற்ற நிலை நிச்சயம் தணியும் என நம்புகிறேன்’ என்றார்.