புதிய நாடாளுமன்றத்தில் நேற்று நிறுவப்பட்ட செங்கோல் அலகாபாத்தில் உள்ள ஆனந்த பவனில் வாக்கிங் ஸ்டிக் போல் வைக்கப்பட்டிருந்தது அதற்கு இன்று தான் விமோஷனம் கிடைத்துள்ளது என்று பிரதமர் மோடி நேற்று கூறியிருந்தார்.

பிரிட்டிஷாரிடம் இருந்து பத்திரங்கள் மூலம் பவரை வாங்காமல் செங்கோல் மூலமே பவர் வாங்கப்பட்டதாக ஆர்.எஸ்.எஸ்.-பாஜக உள்ளிட்ட சங் பரிவாரங்கள் கூறிவருகின்றன.

நேருவிடம் வழங்கப்பட்ட அந்த பவர் நிரம்பிய செங்கோல் அவரது ஆனந்த பவன் இல்லத்தில் இவ்வளவுநாள் கேட்பாரற்று கிடந்ததுபோல் கூறிவருகின்றனர்.

1947 ம் ஆண்டு பிரதமர் பதவி ஏற்பதற்கு முதல் நாள் மரியாதை நிமித்தமாக நேருவை சந்தித்த திருவாவடுதுறை ஆதீனம் அவரிடம் வழங்கிய வெள்ளியிலான தங்கமுலாம் பூசப்பட்ட செங்கோல் 75 ஆண்டுகளாகியும் இன்றளவும் பேசுபொருளாக உள்ளது.

இதுகுறித்து அலகாபாத் அருங்காட்சியக காப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற டாக்டர் ஒங்கர் ஆனந்த் ராவ் வான்கடே ‘தி வயர்’ நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது :

1948 முதல் 1952 ம் ஆண்டு வரை அலகாபாத் அருங்காட்சியகத்திற்கு வந்த பொருட்களை கையாண்டவர் அந்த அருங்காட்சியகத்தின் முதல் காப்பாளரும் பின்னாளில் அருங்காட்சியக இயக்குனராகவும் இருந்த எஸ்.சி. காலா.

ஒரு காப்பாளரின் கடமை தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொருளை வகைப்படுத்தி அதற்கு பெயரிட்டு அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைப்பது மட்டுமே.

அதுபோலவே நேருவுக்கு வழங்கப்பட்ட இந்த பரிசுபொருளுக்கு ‘பண்டித ஜவாஹர்லால் நேருவுக்கு பரிசாக வழங்கப்பட்ட தங்கத் தடி’ என்று பெயரிட்டு பாதுகாக்கப்பட்டது.

இது யாருடையது யாரால் செய்யப்பட்டது எப்போது செய்யப்பட்டது உள்ளிட்ட தகவல்களை சேகரிப்பது வரலாற்று ஆய்வாளர்களின் கடமையே தவிர காப்பளரின் கடமையாகாது.

தவிர, இதற்கு வாக்கிங் ஸ்டிக் என்று பெயரிட்டு அதில் நேருவின் பெயர் கூட குறிப்பிடப்படவில்லை என்று பாஜக-வினர் கூறுவது அப்பட்டமான பொய்.

மேலும், இது அவர்கள் கூறுவது போல் ஆனந்த பவனில் வைக்கப்படவில்லை இது அலகாபாத் அருங்காட்சியகத்தில் தான் வைக்கப்பட்டிருந்தது. தவிர, தான் பதவியேற்பதற்கு முன்பே தனக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்களை மட்டுமன்றி தனக்கு சொந்தமான ஆனந்த பவன் இல்லத்தையும் நாட்டுக்காக வழங்கினார்.

கடந்த 9 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜக 2022 ம் ஆண்டு நவம்பர் மாதம் உ.பி. மாநில ஆளுநர் ஒப்புதலுடன் டெல்லி தேசிய அருங்காட்சியத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையில் இந்த தங்கத் தடியை கொண்டு சென்றது.

இப்படித்தான் அது நேருவின் கைகளில் இருந்து மோடியின் கைகளுக்கு சென்றதே தவிர, ஏதோ அலகாபத்திலோ அல்லது அடையாரிலோ உள்ள ஆனந்த பவனில் கவனிப்பாரற்று விட்டுச் சென்ற பொருளை தூக்கிவந்து அதற்கான மரியாதையை வழங்கியது போல் பாஜக-வினர் கூறிவருவது முற்றிலும் தவறானது என்று அந்த பேட்டியில் வான்கடே கூறியுள்ளார்.