நெல்லை: ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தங்கத்தால் ஆன பட்டயம் மற்றும் பறவை வடிவத்துடன் கூடிய அலங்கார கிண்ணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொல்லியல் ஆய்வாளர்களிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள் கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் தமிழர் நாகரிகத்தின் தொட்டில் என்று அழைக்கப்படுகிறது. தாமிரவருணி என்றழைக்கப்படும் பொருநை நதிக்கரையோரங்களில் உள்ள ஆதிச்சநல்லூா், சிவகளை, கொற்கை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளில் சேகரிக்கப்படும் பழங்கால பொருள்கள் மூலம் பண்பாடு, நாகரிகம், வணிகம் ஆகியவற்றில் தமிழா்கள் சிறந்து விளங்கியவா்கள் என்பதற்கான சான்றுகள் கிடைத்து வருகின்றன.
கடந்த 8 மாத காலமாக நடந்து வரும் இந்த அகழாய்வில் 70க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தங்கத்தால் செய்யப்பட்ட காதணி சில வாரங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. இது சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தை சேர்ந்தது என்றும், 20 கேரட் தங்கத்தால் செய்யப்பட்டது என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து கடந்த மாதம் ஈட்டி ஒன்றும், இடுக்கி போன்ற ஆயுதமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அவற்றின் மீது நெல் படிமங்களும் இருந்துள்ளன. இது இந்தியாவிலேயே முதல்முறையாக ஆதிச்சநல்லூரில் தான் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஆதிச்சநல்லூர் சி சைட் எனப்படும் அலெக்சாண்டர் ரியாவில் ஏற்கனவே அகழாய்வு செய்யப்பட்ட இடத்தில் 30 செ.மீட்டர் ஆழத்தில் நடந்த அகழாய்வு பணியில் தங்கத்தால் மூன்று சென்டிமீட்டர் நீளம் கொண்ட தங்கத்தால் ஆன நெற்றிபட்டயம் கண்டறியப்பட்டுள்ளது. மேலுமி, வெண்கல வடிகட்டி, 2 கிண்ணம் தாங்கிய பறவை வடிவத்துடன் கூடிய அலங்கார கிண்ணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவைத்தவிர, 18 இரும்பு பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.