சென்னை:  நாடு முழுவதும் தங்கத்தின் விலை மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த வாரம் ஒரே நாளில் ஆயிரத்து நூறு ரூபாய் உயர்ந்து சவரன் ரூ.50 ஆயிரத்தை கடந்த  நிலையில், இன்று மேலும்  உயர்ந்து,  ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 51,640 ஆக உயர்ந்துள்ளது. இது பெண்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு 85 ரூபாய் அதிகரித்து 6,455 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒரு சவரன் ஆபரணத் தங்கம் புதிய உச்சமாக 51,640 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இந்திய மக்களிடையே தங்கத்திற்கு தனி மரியாதை உண்டு.  பல நூற்றாண்டுகளாக,  இந்திய  பெண்களின் வளர்ச்சியில் தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. தங்கம், அதனால் செய்யப்பட்ட அணிகலன்கள் அணிவது மூலம் சமூதாயத்தில் தங்களை உயர்ந்தவர்களாகவும் பெண் காட்டிக்கொள்கின்றனர்.  தங்க நகைகள் மீதான பெண்களின் அதீத ஆசை காரணமாகவும், உலகம் முழுவதும் சேமிப்புக்காகவும் தங்கம் அதிக அளவில் விற்பனையாகிறது.  அதன் விலைகளும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

2024 தொடக்கம் முதலே தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில், கடந்த மார்ச் ஒன்றாம் தேதி தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 2024 பிப்ரவரி மாத இறுதியில், கிராம் தங்கம் விலை ரூ. 5,815 ரூபாய் ஆக இருந்த நிலையில்,  மார்ச் ஒன்றாம் தேதி கிராமிற்கு 25 ரூபாய் உயர்ந்து,  ஆபரணத் தங்கத்தின் விலை 5,840 ஆக இருந்தது. ஒரு சவரன் ரூ.  46,520க்கு விற்பனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தங்கத்தின் விலை சிறுக சிறுக உயர்ந்து வருகிறது. புதிய உச்சமாக  மார்ச் 27-ம் தேதி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 50 ஆயிரம் ரூபாயை எட்டியது. அதன் பின்னரும் தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்தபடியே இருந்தது.

இந்த நிலையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு 85 ரூபாய் அதிகரித்து, 6,455 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.680 உயர்ந்து புதிய உச்சமாக 51,640க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஒரு கிராம் வெள்ளி நேற்று 81 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 60 பைசா உயர்ந்து, 81 ரூபாய் 60 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கத்தின் விலை, நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.