சென்னை,
இந்தியாவில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் தங்கமாக மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
நேற்றுஇரவு திடீரென பிரதமர் மோடி ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுக்கள் செல்லாது அறிவித்து விட்டார். இதனால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளானார்கள்.
இதன் காரணமாக, நேற்று இரவே மக்கள் நகைக்கடைகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கி விட்டனர். இதன் காரணமாக இன்று தங்கம் சரவனுக்கு ரூ.1500 வரை உயர்ந்துள்ளது. மேலும் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பால் தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என நகை வணிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
தங்கத்தில் முதலீடு செய்வது இந்தியர்களுக்கு பிடித்தமானது. இதன் காரணமாக உலக நாடுகளைவிட தங்கத்தின் விலை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இனிமேல் தங்கத்தில் முதலீடு செய்வதுதான் பாதுகாப்பு என கருதி மக்கள் தங்கத்தை நோக்கியே படையெடுப்பார்கள் என கணிக்கப்படுகிறது.
இதன் காரணமாக, தங்களின் சேமிப்பை தங்கமாக மாற்றி வைக்கவே விரும்புவார்கள். இதன் காரணமாக தங்க வர்த்தகம் அதிகரிக்கும், அதேபோல் விலையேற்றமும் அதிகரிக்கும் என தெரிகிறது.
நேற்று இரவு இந்த அறிவிப்பு வெளியானது முதலே ஏடிஎம் மையங்களை முற்றுகையிட்டது போல், மக்கள் நகைக்கடைகளையும் முற்றுகையிட்டனர். சென்னை திநகர் போன்ற இடங்களில் உள்ள நகைக்கடைகளில் நள்ளிரவு வரை மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததைக் காண முடிந்தது.
மக்கள் தங்களிடமிருந்த ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகளை தங்கமாக மாற்றுவதில் மும்முரமாக ஈடுபட்டனர்.
ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் திருமணத்திற்கு உகந்த மாதமாகும். இந்த மாதங்களில் நிறை திருமணங்கள் நடைபெறும்.
ஆகவே, திருமணத்திற்கு தேவையான நகைகள் வாங்குபவர்கள் நேற்று இரவே நகைக்கடைகளை முற்றுகை யிட்டதாக தெரிகிறது.
இதனால் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் நேற்றிரவு பெரும்பாலான நகைக்கடைகள் திறந்திருந்தன. நள்ளிரவு தாண்டியும் ஒரு சில கடைகளில் வியாபாரம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
அவர்கள் பணத்தை வாங்கி, தாங்கள் வங்கி மூலம் மாற்றிக்கொள்கிறோம் என்று கூறி, தங்கத்தை சவரன் ஒன்றுக்கு 1000 முதல் 3000 வரை கூடுதலாக விற்றதாகவும் கூறப்படுகிறது.
மக்களின் இந்த ஆர்வத்தால் தங்க ஆபரணங்களின் விலை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கத்தின் விலை உயர்வால், வீட்டில் சுபகாரியங்களை எதிர்நோக்கி காத்திருக்கும் நடுத்தர குடும்பத்தினர் பெரும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.