சென்னை: தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை சரவன் ரூ.68ஆயிரத்தை தாண்டிய நிலையில், இன்று இரண்டாவது நாளாக விலை குறைந்து வருகிறது. இன்று சவரனுக்கு ரூ.720 குறைந்துள்ளது.
உலகம் முழுவதும் தங்கத்தின் விலை விர்ரென்று உயர்ந்துகொண்டே வருகிறது. சர்வதேச சந்தை நிலவரத்தின் படி தங்கத்தின் விலை உயர்வதாக கூறப்படுகிறது. இந்தியாவிலும், தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு சரவன் தங்கம் விலை ரூ.50ஆயிரம் இருந்த நிலையில், தொடர்ந்து உயர்ந்து தற்போது, ரூ.70ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் இறக்கமாக மாறி மாறி வருகிறது. 2025 ஜனவரி தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை வரலாறு காணாத அளவில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. தொடர் உயர்வு காரணமாக, தங்கத்தின் விலை 2025 ஏப்ரல் 1ந்தேதி அன்று சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.8,510க்கும், ஒரு சவரன் ரூ.68,080க்கும் விற்பனை செய்யப்பட்டது.
நேற்று முன்தினம் (ஏப்ரல் 3ந்தேதி) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.68,480க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் தங்கத்தின் விலை ரூ.70ஆயிரத்தை நெருங்கும் வாய்ப்பு இருப்பதாக வணிகர்கள் கூறிய நிலையில், பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
ஆனால் நேற்று தங்கத்தின் விலை திடீரென குறைந்தது. நேற்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 குறைந்து ரூ.67,200க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.160 குறைந்து ரூ.8,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ.108-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த இரு நாட்களில் மட்டும் சரவனுக்கு ரூ.2000 ஆயிரம் வரை குறைந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.