தங்கம் விலை இன்று பவுனுக்கு 304 ரூபாய் உயர்ந்து 29 ஆயிரத்து 744 ரூபாய் என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதுபோலவே 10 கிராம் சுத்த தங்கத்தின் விலை 40 ஆயிரம் ரூபாயை கடந்தது.
உலகளாவிய பொருளாதாரச் சூழலால் அமெரிக்க டாலரின் மதிப்பு குறையும் சூழல் உள்ளது. அமெரிக்கா- சீனா வர்த்தகப் பிரச்சினை பெரிய அளவில் உருவெடுத்து வருகிறது. இதுபோலவே, ஈரான் – அமெரிக்கா இடையே நிலவி வரும் போர்ப் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதுமட்டுமின்றி சில ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக அளவில் பொதுவாக காணப்படும் வர்த்தகச் சுணக்கம் தற்போது ஏற்பட்டுள்ளது.
இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளனர். அரசுகள் மட்டுமின்றி பெரிய நிறுவனங்களும் தங்கள் முதலீட்டுக்கு பாதுகாப்பு கருதி தங்கத்தை வாங்குகின்றன.
இதுமட்டுமின்றி அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்து வருகிறது. இதுவும் தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கணிசமாக உயர்ந்து வந்தது.
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு பவுனுக்கு( 8 கிராம்) 304 ரூபாய் உயர்ந்து ரூ. 29,744-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 38ரூபாய் உயர்ந்து ரூ. 3,718.00 -க்கு விற்பனையாகிறது.
இதனிடையே 10 கிராம் சுத்த தங்கத்தின் விலை மும்பை சந்தையில் 40 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. அடுத்த சில வாரங்களில் விலை 41 ஆயிரத்தை தொடும் என மும்பை தங்க வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.