சென்னை:
கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியம் அளித்ததாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சுவாதி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ், ஆணவக் கொலை செய்ததாக சேலம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் யுவராஜ் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியும், 5 பேரை விடுதலை செய்தும் மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் 2022 மார்ச் 8-ல் தீர்ப்பளித்தது.

யுவராஜ் உட்பட எட்டு பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்த சென்னை உயர் நீதிமன்றம், இருவரின் ஆயுள் தண்டனையை ஐந்து ஆண்டுகளாக குறைத்து ஜூன் 2-ம் தேதி தீர்ப்பளித்திருந்தது.

இந்த மேல் முறையீட்டு வழக்கு விசாரணையின் போது இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக இருந்து பிறழ்சாட்சியாக மாறிய கோகுல்ராஜின் தோழியான சுவாதிக்கு எதிராக தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது சுவாதி கைக்குழந்தையுடன் ஆஜராகியிருந்தார். அவர் தரப்பில் பதில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையை நேரில் நடத்த வேண்டும் என சுவாதி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கு விசாரணையை நவம்பர் 3-ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அடுத்த விசாரணைகளின் போது நேரில் ஆஜராவதில் இருந்து சுவாதிக்கு விலக்களித்து உத்தரவிட்டனர்.