கடந்த ஆட்சி காலத்தில் அதிகாரம் மிக்க அமைச்சர்களில் ஒருவராக வலம் வந்த கோகுல இந்திராவின் கட்சிப்பதவியை பறித்திருக்கிறார் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா. இந்த நிலையில் கட்சியிலிருந்தும் கோகுல இந்திரா நீக்கப்பட்டிருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவி ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
யார் இந்த கோகுல இந்திரா?
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கோகுல இந்திராவை 1990 களில் அரசியலுக்கு அழைத்து வந்தவர், அப்போது பவர்புல்லாக விளங்கிய கண்ணப்பன்தான்.
சட்டப்படிப்பு முடித்த இளம் வக்கீலான கோகுல இந்திரா, வெகு விரைவிலேயே அரசியல் சூட்சமங்களில் தேர்ந்துவிட்டார். ஜெயலலிதாவின் உடன்பிறவா தோவியான சசிகலாவின் அணுக்கத் தொண்டராக தன்னை வெளிப்படுத்திக்கொண்டார்.
2001ம் ஆண்டு ராஜ்ய சபா எம்பி , மாநில மகளிரணி செயலாளர் என்று கிடுகிடுவென வளர்ந்தார்.
தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வந்தது. அதில் வென்றார். சசிகலாவின் கருணையால் வணிகவரித்துறை என்ற முக்கியதுறைக்கு அமைச்சரானார்.
அப்போது இவர் மீது புகார்கள் தொடர்ந்து வர… சுற்றுலாத்துறை அமைச்சராக்கப்பட்டார். அதன் பின்னர் சசிகலா அணட்கோவை ஜெயலலிதா வெளியேற்றியபோது கோகுல இந்திராவின் அமைச்சர் பதவியும் போனது.
“நான் எப்போதும் அம்மாவின் விசுவாசிதான்” என்று இவர் அழுத அழுகையில் மீண்டும் அமைச்சரவையில் இடம் கிடைத்தது. கைத்தறி துறை அமைச்சரானார்.
அப்போதுதான் சகாயம் ஐஏஎஸுக்கும் இவருக்கும் மோதல் போக்கு ஏற்பட்டது.
அமைச்சர் அந்தஸ்த்துடன் மாநில மகளிரணி பதவி, மனுக்கள் விசாரணை குழு என கட்சியிலும் அதிகாரத்தோடு வலம் வந்தார் கோகுல இந்திரா.
முதல்வர் ஜெயலலிதா, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருந்தார் அல்லவா?
அப்போது அவரது பிறந்த நாளுக்கு கேக் வெட்ட சாதாரண நூல் புடவையுடன் வந்து அழுது புரண்ட இவரைக்கண்டு, சக அமைச்சரான வளர்மதியே மிரண்டுபோய்விட்டார்.
ஆனால் மறுநாளே அரசு விழாவில் படோபட பட்டுப்புடவையில் வந்து அசத்தினார் என்பதும் குறிப்பிட வேண்டிய விசயம்.
இப்படி அரசியிலில் சொல்லி அடித்த அவரால்,கடந்த தேர்தலில் தனது அண்ணாநகர் தொகுதியை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.
“அம்மா” துதி பாடுவதும், தனக்கு தேவையானர்களுக்கு தேவையானதை செய்வதும் மட்டும் போதும் என்று நினைத்தார். தொகுதியை கவனிக்கவில்லை. குறிப்பாக கடந்த டிசம்பர் மாத சென்னை வெள்ளத்தின்போது தொகுதி பக்கம் தலைகாட்டவே இல்லை இவர்.
இதன் எதிரொலியாக கடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தார்.
அதிலிருந்தே இவருக்கு இறங்குமுகம்தான். நேற்று மாநில மகளிரணி செயலாளர் பதவி பிடுங்கப்பட்டது.
இன்றோ, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்கப்பட்டார் என்று ஃபேஸ்புக், வாட்ஸ் அப்புகளில் வேகமாக தகவல் பரவி வருகிறது.
ஆனால் கட்சி வட்டாரத்தில் விசாரித்ததில், “ கட்சி பொறுப்பிலிருந்து அவர் நீக்கப்பட்டது உண்மைதான். ஆனால் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டார் என்பது சரியல்ல” என்கிறார்கள்.
அதே நேரம் அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை இழக்காமல் பேசுகிறார்கள்.
“அக்கா (கோகுல இந்திரா) மிகத் திறமையானவர். கட்சியில் சிலர் அவரை எதிரியாக நினைத்து மேலிடத்தில் போட்டுக்கொடுத்துவிட்டார்கள். அதனால் கட்சிப்பதவியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் பன்முகம் கொண்டவர். தனது தரப்பு நியாயத்தை “அம்மா”விடம் சொல்லி மீண்டும் பவருக்கு வரும் திறமை அவருக்கு உண்டு” என்கிறார்கள் நம்பிக்கை இழக்காமல்.