டெல்லி: கொரோனா விவகாரத்தில் மத்திய அரசு அதீத நம்பிக்கையுடன் அலட்சியமாக செயல்படுகிறது என குற்றம்சாட்டியுள்ள ராகுல்காந்தி, வெளிநாடுகளில் ஏற்படும் பாதிப்புகளை சுட்டிக்காட்டி டிவிட் பதிவிட்டுள்ளார்.
உலக நாடுகளின் பொருளாதாரத்தை புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டாலும், தொடர்ந்து பரவி வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 கோடியை தாண்டி உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும், 3,42,081 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதுவரை 24 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தில் இருந்து வருகிறது.
இந்தியாவில், நேற்று மட்டும் 11,573 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1லட்சத்து 9 ஆயிரத்தை கடந்து உள்ளது. அதே வேளையில் பலியானோர் எண்ணிக்கையும் 1,55,949 ஆகி அதிகரித்து உள்ளது. பல மாநிலங்களில்வ தொற்று பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. மேலும், வெளிநாடுகளில் இருந்து இநதியா திரும்பியவர்களில் பலருக்கு உருமாறிய புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. முதல்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கொரோனா விவகாரத்தில் மத்தியஅரசு அலட்சியமாக இருந்து வருவதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “ கொரோனா விவகாரத்தில் இந்திய அரசு அலட்சியமாகவும், அதீத நம்பிக்கையிலும் உள்ளது. கொரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை” என்று தெரிவித்துள்ளதுடன், பிரேசில், தென் ஆப்பிரிக்க கொரோனா வைரஸ் திரிபு இந்தியாவில் ஊடுருவியிருப்பதை மேற்கோள் காட்டியுள்ள வெளியாகி உள்ள செய்திகளையும் சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார்.