மும்பை: கொரோனா விதிமுறைகளை சரியாக பின்பற்றாவிட்டால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதற்கு முக்கிய காரணம், பொதுமக்கள் முகக்கவசம், தனிமனித இடைவெளிகளை பின்பற்றாததே  என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில், மாநில முதல்வர் உத்தவ்தாக்கரே,   வீடியோ கான்பரன்சிங் மூலமாக மாநகராட்சி கமிஷனர்கள மற்றும் மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.  அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு சில அறிவுரைகளையும் கூறினார்.

மக்கள் நலன் கருதி படிப்படியாக விதிமுறைகள் தளர்த்தப்பட்டு உள்ளது. ஆனால், போடப்பட்டுள்ள சில விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் மக்கள் அதிகம் அலட்சியம் காட்டுவது கவலை அளிக்கிறது .  கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்க போகிறீர்களா? அல்லது மீண்டும் முழு ஊரடங்கு சந்திக்க போகிறீர்களா? என கேள்வி எழுப்பினார்.

மேலும், அதிகாரிகள் பொதுமக்கள் முகக் கவசம் அணிவது சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதுடுன், இல்லையேல்,  மாநிலத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்த வேண்டிய நிலைமை வரும் என எச்சரிக்கை கொடுத்துள்ளார்.