பனாஜி: இன்று நாடு முழுவதும் கிறிஸ்தவர்களின் புனித வெள்ளி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவாவில் உள்ள தேவாலயங்களில் கொரோனா நெறிமுறைகளுடன் புனித வெள்ளி கொண்டாட்டம் நடைபெற்றது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால்,  கொரோனா கட்டுப்பாடுகளை மீண்டும் மத்திய மாநில அரசுகள் தீவிரப்படுத்தி உள்ளன. அதன்படி, மாஸ்க் அணிவதுடன், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், பொதுமக்கள் அதிகம் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோவாவில் புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகையின்போது கொரோனா நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மாநில அரசு அறிவுறுத்தி இருந்தது. அதன்படி,  கோவா தலைநகர்ல பனாஜியில் உள்ள இமாக்குலேட் கான்செப்சன் தேவாலயத்தில் புனித வெள்ளியான இன்று மக்கள்  பிரார்த்தனையில் கொரோனா நெறிமுறைகளை கடைபிடித்து கலந்துகொண்டனர்.

முன்னதாக தேவாலயம் வந்தவர்களுக்கு  உடல் வெப்பநிலை சோதிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு கைகளை சுத்தப்படுத்தசானிடைசர் வழங்கப்பட்டது. மேலும், ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிந்துள்ளார்களா என்று கண்காணிக்கப்பட்டதுடன், முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தேவாலயம் சார்பில் முகக்கவசம் வழங்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் பிரார்த்தனை நடைபெற்றது.

கோவாவில் நேற்றைய நிலவரப்படி புதிதாக 265 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளன. இதுவரை மொத்த பாதிப்பு 58,304 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.