பானஜி:

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்.


முன்னாள் மத்திய அமைச்சரும் கோவா முதல்வருமான மனோகர் பாரிக்கர்  புற்று நோயால் பாதிப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

அவருக்கு வீட்டிலேயே தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், அவரது உடல்நிலையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சை அளித்துவரும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

மனோகர் பாரிக்கரை காப்பாற்ற தொடர்ந்து போராடி வந்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி முதல்வர் மனோகர் பாரிக்கர் நேற்று இரவு 8 மணி அளவில் காலமானதாக டாக்டர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இதனையடுத்து பாஜக நிர்வாகிகள் கூட்டம் கோவாவில் நடைபெற்று வருகிறது.
முதல்வர் மனோகர் பாரிக்கரின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

ராகுல்காந்தி தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைந்த செய்தி அறிந்து வேதனையடைந்தேன். கடந்த ஓராண்டாகவே நோயோடு அவர் போராடிக் கொண்டிருந்தார். கட்சியைக் கடந்து அனைவரது நன்மதிப்பை பெற்றவர். கோவாவின் செல்ல மகன்களில் ஒருவர். அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரை ஒரு முறை தான் சந்தித்திருக்கின்றேன். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த என் தாயாரை பார்க்க வந்திருந்தார். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று தெரிவித்துள்ளார்.

முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

63 வயதான மனோகர் பாரிக்கர் மத்திய பாதுகாப்பு அமைச்சராகவும், 3 முறை கோவா முதல்வராகவும் இருந்துள்ளார்.

முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மார்ச் 18-ம் தேதி தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அன்றைய தினம், புதுடெல்லி மற்றும் மாநிலத் தலைநகரங்கள், யூனியன் பிரதேசங்களில் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அன்றைய தினம் காலை 10 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.