பாரிக்கர் (பா.ஜ)  – கிரிஷ் (காங்கிரஸ்)

பனாஜி,

முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய கோவா முதல்வரும் போட்டியிடும் பனாஜி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.

கோவாவில் நடைபெற்று வரும இடைத்தேர்தலில் பாரதியஜனதாவை சேர்ந்த முதல்வர் மனோகர் பாரிக்கருக்கும், காங்கிரசை சேர்ந்த கிரிஷ் சொடன்காருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

பனாஜி தொகுதியை பிடிக்க பாரதியஜனதா கடுமையாக முயற்சி செய்து வருகிறது. பல்வேறு அதிரடி ஆசை அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.  இருந்தாலும்,  காங்கிரஸ் வெற்றிபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பனாஜி தொகுதியில் இன்று  காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. கோவா  முதல்வர் மனோகர் பாரிக்கர் காலையிலேயே வாக்குச்சாவடிக்க வந்து வரிசையில் நின்று வாக்களித்தார்.

பனாஜி தொகுதியில் 76 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 51,02 பேர் வாக்களிக்க இருப்ப தாகவும், பனாஜியில் 22,203 வாக்காளர்களும், வால்பாய் பகுதியில் 28,829 வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர்.

இந்த தொகுதியில்தான்  நாட்டிலேயே முதன்முதலாக விவிபிடி (Voter Verifiable Paper Audit Trail-VVPT) எனப்படும் ஓட்டு பதிவு செய்ததற்கான அத்தாட்சி மெஷின் வைக்கப்பட்டுள்ளது.

கோவாவின்  பனாஜி தொகுதியில் கடுமையான போட்டி நிலவி வலுருகிறது. முதல்வர்  பாரிக்கரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கிரீஷ் சோதாங்கர் மற்றும் கோவா சுரக்ஷா மஞ்ச் சார்பில் ஆனந்த் சிரோத்கர் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

இதற்கிடையில், பனாஜியை இந்தியாவின் பிற நகரங்களுக்கு முன்மாதிரியாக உருவாக்குவேன். இங்கு உலகத் தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். தொகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராங்கள் பொருத்தப்பட்டு சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்படும் என்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளார்.

மத்திய அமைச்சராக இருந்த பாரிக்கர் கோவா முதல்வராக தேர்வானதை தொடர்ந்து, அவரது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு,முதல்வராக பதவி ஏற்றார். அதைத் தொடர்ந்து, பரிக்கார் போட்டியிட வசதியாக,   அத்தொகுதி பாஜக எம்எல்ஏ சித்தார்த் குன்கோலிங்கர், தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

அதேபோல்  வல்போய் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ விஸ்வஜீத் ராணேவும் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, பாஜகவில் இணைந்தார். அத்தொகுதியிலும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற கோவா சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காததால், 40 தொகுதிகளில் காங்கிரஸ் 17 இடங்களிலும், பா.ஜனதா 13 இடங்களிலும் வெற்றி பெற்றது.

ஆனால், ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், குதிரைபேரத்தில் ஈடுபட்ட பாரதியஜனதா, மகாராஷ்டிரா வாடி கோமந்த கட்சி, கோவா பார்வர்டு கட்சி, சுயேட்சைகளை விலைக்கு வாங்கினர்.

இதன் காரணமாக 21 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் பாரதியஜனதா மனோகர் பாரிக்கர் தலைமையில்  ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.

இன்று மேலும் சில இடங்களிலும் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.

ஆந்திர மாநிலத்தின் கர்னூல் மாவட்டம், நந்தியாலா சட்டமன்ற தொகுதி மற்றும் டில்லியில் உள்ள பவானா சட்டப்பேரவை தொகுதிக்கும் இன்று இடைத் தேர்தல் நடைபெற்று வருகின்றது.