சென்னை பெருநகர பகுதியை 1189 சதுர.கி.மீ.லிருந்து 5904 சதுர கி.மீட்டராக அதிகரிக்க தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள 15 தாலுக்காவைச் சேர்ந்த 1,225 க்கும் மேற்பட்ட கிராமங்களை சென்னை பெருநகர பகுதியாக வளர்த்தெடுப்பது குறித்து ஆலோசனையில் இருந்த இந்த திட்டத்திற்கு தமிழக அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது.

தற்போது 1189 சதுர கி.மீ. பரப்பளவில் உள்ள சென்னை பெருநகர பகுதி இனி சென்னை பெருநகர மைய்யப்பகுதி என்று குறிப்பிடப்படும்.

கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை, திருத்தணி (பகுதி), அரக்கோணம் (பகுதி), திருவள்ளூர், பூந்தமல்லி (பகுதி) மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய எட்டு தாலுகாக்களில் உள்ள 2,908 சதுர கி.மீ. சென்னை பெருநகரப் பகுதி வடக்குப் பகுதியாக உருவெடுக்கும்.

காஞ்சிபுரம், வாலாஜாபாத், செங்கல்பட்டு, திருக்கழுகுன்றம், திருப்போரூர், குன்றத்தூர் (பகுதி) மற்றும் வண்டலூர் (பகுதி) ஆகிய ஏழு தாலுகாக்களில் உள்ள 1,809 சதுர கி.மீ. சென்னை பெருநகரப் பகுதி தெற்கு என்று குறிப்பிடப்படும்.

இதன் மூலம் ஹைதராபாத் பெருநகரப் பகுதிக்கு அடுத்தபடியாக நாட்டிலேயே இரண்டாவது பெருநகர பகுதியாக சென்னை விளங்கும்.

ரங்காரெட்டி, மஹ்பூப்நகர், நல்கொண்டா மற்றும் மேடக் ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய ஹைதராபாத் பெருநகரப் பகுதியின் மொத்த பரப்பளவு 7,222 சதுர கி.மீ.

5,904 சதுர கி.மீ. பரப்பளவு விரிவாக்கம் பெறவுள்ள சென்னைக்கு அடுத்த இடத்தில் 4,355 சதுர கி.மீ. பரப்பளவுடன் மும்பை பெருநகரம் மூன்றாவது இடத்தில் உள்ளது.

தமிழக அரசின் இந்த உத்தரவால் பல்வேறு அபிவிருத்தி மற்றும் கட்டுமானப் பணிகள் மூலம் பெருமளவு முதலீடுகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தொழில்துறையின் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.