டில்லி
டிவிட்டரில் பிரதமருக்கு எதிராகப் பதிவுகள் இட்ட விமான ஓட்டி மிகி மாலிக் என்பவரை கோ ஏர் விமான நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது.
இந்தியாவின் விலை குறைந்த விமானச் சேவை நிறுவனங்களில் ஒன்றான கோ ஏர் என்னும் விமானச் சேவை நிறுவனத்தில் மிகி மாலிக் என்பவர் விமான ஓட்டியாகப் பணி செய்து வருகிறார். இவர் மூத்த விமான ஓட்டிகளில் ஒருவர் ஆவார். இவர் விமானப்படையில் பணி செய்தவர் ஆவார். அந்த கால கட்டத்தில் இவர் நாட்டுக்காகப் பல பணிகளை செய்துள்ளார்.
மிகி மாலிக் இலங்கை போரின் போது வவுனியாவுக்குப் பறந்துள்ளார். அத்துடன் சுனாமி அலை கொடூரத்தைக் காணப் பிரதமர் சென்ற போது விமான ஓட்டியாகப் பணி புரிந்துள்ளார். அது மட்டுமின்றி கல்வானில் தளவாடங்களை எடுத்துச் சென்றுள்ளார். இவரது நாட்டுப்பணிகளைப் பலரும் பாராட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவர் சமீபத்தில் தனது சொந்த டிவிட்டர் பக்கத்தில், “பிரதமர் ஒரு முட்டாள். நீங்கள் என்னையும் அப்படியே அழைக்கலாம். ஆனால் அது எனக்கு ஒரு பொருட்டல்ல. ஏனென்றால் நான் பிரதமர் இல்லை. ஆனால் பிரதமர் ஒரு முட்டாள்” என பதிந்திருந்தார். இது கோ ஏர் நிர்வாகத்துக்குப் பிடிக்கவில்லை எனத் தெரிய வந்துள்ளது. எனவே மிகி மாலிக் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையே மிகி மாலிக் தனது டிவீட்டுகளை நீக்கியதுடன் தனது டிவிட்டர் கணக்கையும் முடக்கி வைத்துள்ளார். ஆயினும் அவர் நிர்வாகத்தினரால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் நாட்டுக்குப் பல பணிகள் ஆற்றிய போதும் அதை கோ ஏர் நிர்வாகம் கவனத்தில் கொள்ளவில்லை எனவும் அவரது தனிப்பட்ட கருத்துக்காக நிர்வாகத்தால் அவர் பழி வாங்கப்பட்டுள்ளதாகும் நெட்டிசன்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.