சென்னை:

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சென்னை உயர்நீதி மன்றத்தில் முறையீடு செய்தார்.

ஆனால், இதுகுறித்து மனுவாக தாக்கல் செய்தால், நாளை விசாரிக்கலாம் என்று சென்னை உயர்நீதி மன்றம் அறிவித்து உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி,  அதிமுக-தமிழ் மாநில காங்கிரஸ் இடையே கூட்டணி ஏற்பட்டு கடந்த 13ந்தேதி ஒப்பந்தம்  கையெழுத்தானது. அதைத்தொடர்ந்து தமாகவுக்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கபடுவதாக அறிவிக்கப்பட்டது.  அதையடுத்து தஞ்சாவூர் தொகுதியில் என்.ஆர்.நடராஜன் போட்டியிடுவார் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்து உள்ளார்.

தமாகாவுக்கு ஏற்கனவே சைக்கிள் சின்னம் இருந்த நிலையில், தற்போதைய தேர்தலில் தேர்தல் விதிப்படி, வாக்குகள் பெறாததால், அவர்களிடம் இருந்து சைக்கிள் பறிக்கப்பட்டது. தற்போதைய நிலையில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும் சூழல் உருவாகி உள்ளது.

இந்த நிலையில்,  தமாகாவுக்கு ‘சைக்கிள்’ சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் ஜி.கே.வாசன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது.