டெல்லி: “பில்கிஸ் பானுவுக்கு நீதி வழங்குங்கள்” என ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2002-ம் குஜராத்தில் நடைபெற்ற இனக்கலவரத்தின்போது, 5 மாத கர்ப்பிணியாக இருந்த 21 வயதான பில்கிஸ் பானு என்ற பெண், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது 3 வயது பெண் குழந்தை உட்பட 14 பேர் அன்றைய கலவரத்தில் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கைதான 11 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு கடந்த 2008ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்து சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு 13 ஆண்டுகள் கடந்த நிலையில், அவர்களை 11 பேரையும், குஜராத் மாநில அரசு நன்னடத்தை விதிகளின்படி, 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கடந்த 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது.
இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குஜராத் மாநில அரசின் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, குற்றவாளிகள் எந்த அடிப்படையில், நன்னடத்தையின் கீழ் விடுவிக்கப்பட்டனர். இந்த பொதுநல மனுக்கள் தொடர்பாக மத்திய, மற்றும் மாநில அரசு 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டது.
இந்த நிலையில், பில்கிஸ் பானுவுக்கு நீதி வழங்குங்கள் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார். அவரது டிவிட்டில், “‘பேட்டி பச்சாவோ’ (பெண்குழந்தைகளை பாதுகாப்போம்) போன்ற வெற்று முழக்கங்களைக் கொடுப்பவர்கள் கற்பழிப்பவர்களைக் காப்பாற்றுகிறார்கள். இன்று நாட்டின் பெண்களின் மரியாதை மற்றும் உரிமை குறித்து கேள்வி எழுந்துள்ளது. பில்கிஸ் பானோவுக்கு நீதி வழங்குங்கள்” என்று அதில் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.