ஸ்லாமாபாத்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்க்கட்சி தலவர்கள் ஆசிஃப் அலி சர்தாரி, மற்றும் நவாஸ் ஷெரீஃப் ஆகியோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி மீது மூன்று ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அவர் தற்போது தேசிய கணக்காயத்தின் காவலில் உள்ளார். இவர் மீதும் இவர் சகோதரி பாயல் மீதும் போலி வங்கிக் கணக்குகள் மூலம் பண மோசடி செய்யப்பட்ட வழக்குகள் உள்ளன. இந்த ஊழல்களில் சுமார் ரூ15 கோடி வரை பணம் கைமாறியதாக  கூறப்படுகிறது.

நவாஸ் ஷெரிஃப் மற்றும் அவர் குடும்பத்தினர் லண்டனில் முறைகேடாக வாங்கிக் குவித்த சொத்துக்கள் குறித்து பனாமா பேப்பர் தகவல் வெளியிட்டதை அடுத்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2018 ஆம் வருடம் டிசம்பர் 24 அன்று அவருக்கு பாக் நீதிமன்றம் 7 வருட சிறை தண்டனை அளித்துள்ளது. இந்த குற்றச்சாட்டை ஷெரிஃப் மற்றும் அவர் குடும்பத்தினர் மறுத்து வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் நவாஸ் ஷெரிஃப் சார்பில்  கோரப்பட்ட ஜாமீன் மனுவை நிராகரித்தது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், “முன்னாள் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி, நவாஸ் ஷெரிஃப் போன்ற ஊழல் அரசியல்வாதிகளுக்கு பாகிஸ்தான் அரசு கருணை காட்டாது. அதே நேரத்தில் அவர்கள் இந்த நாட்டில் இருந்து கொள்ளையடித்த பணத்தை திரும்ப அளித்தால் அவர்களுக்கு நாட்டை விட்டு வெளியேற வாய்ப்பு அளிக்கப்படும்.

ஷெரிஃபின் மகன்கள் இரண்டு நேச நாடுகள் உதவியுடன் அவரை விடுதலை செய்ய முயற்சி செய்து வருகின்றனர்.  ஆனால் அந்த நாடுகள் இந்த விவகாரத்தில் தலையிட மாட்டோம் என என்னிடம் சொல்லி விட்டன.

தற்போது ஷெரிஃப் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல விரும்பினால் அவர் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்தால் மட்டுமே அவருக்கு அனுமதி அளிக்கப்படும்,.. அதையே சர்தாரிக்கும் நான் தெரிவித்துக் கொள்கிறேன். அதை விடுத்து வேறு முயற்சிகள் செய்தால் அது நடக்காது என எச்சரிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.