மொட்டைமாடி செல்ஃபி…… பறந்துபோன சிறுமியின் உயிர்

கரூர எல்ஜிபி நகரைச் சேர்ந்த முருகன் – உமாதேவி தம்பதி.  இவர்களின் 15 வயது மகள் விஷாலினி புன்னம்சத்திரம் பகுதியில் உள்ள தனியார்ப் பள்ளியில், 10-ம் வகுப்பு படித்து வந்தார்.  கொரோனா ஊரடங்கால் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடந்த விஷாலினி அதே பகுதியில் உள்ள தனது தாத்தாவின் அப்பார்ட்மென்ட்டுக்குச் சென்றுள்ளார்.  அந்த அப்பார்ட்மென்ட் ஐந்து மாடிகளைக் கொண்டது.

ஐந்தாவது மாடியின் உச்சிக்குச் சென்ற விஷாலினி மொட்டை மாடி சுவரில் ஏறி செல்ஃபி எடுக்க முயற்சி செய்திருக்கிறார். அப்போது கால் தவறி கீழே விழுந்திருக்கிறார்.  உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த விஷாலினியை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர்.

ஆனால் அங்கு நிலைமை மோசமாகிவிட மருத்துவர்கள்  கைவிரித்துள்ளனர். இதனால் விஷாலினியை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சென்றனர்.  ஆனால், அங்குள்ள மருத்துவர்கள் விஷாலினி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.  இந்தச் சம்பவம் குறித்து கரூர் நகர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தேவையில்லாத செல்ஃபி மோகம் ஒரு சிறுமியின் உயிரைப் பலியாக்கிவிட்டது.  ஐந்தாவது மாடியிலிருந்து தவறி விழுந்து இறந்த அச்சிறுமியின் பெற்றோர் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

– லெட்சுமி பிரியா