காரைக்குடி:

அதிமுக எம்பி அன்வர் ராஜாவின் மகன் நாசர் அலியால் பாதிக்கப்பட்டதாக பள்ளிவாசல் முன் பெண் போராட்டம் நடத்தியதால், இன்று நடைபெற இருந்த நாசர் அலி திருமணம் நிறுத்தப்பட்டது.

அதிமுக எம்பியான அன்வர் ராஜாவின் மகன், நாசர் அலி. அவர் மீது சென்னையை சேர்ந்த ரொபினா கடந்த இரு நாட்களுக்கு முன் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

அதில், நாசர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னிடமிருந்து 50 லட்ச ரூபாய் பறித்து ஏமாற்றிவிட்டதாக தெரிவித்திருந்தார்.

தற்போது வேறு ஒரு பெண்ணை நாசர் மார்ச் 25-ஆம் தேதி திருமணம் செய்ய இருப்பதாகவும், இதைத் தட்டிக்கேட்டால் எம்.பி. அன்வர்ராஜா கொலை மிரட்டல் விடுவதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று காரைக்குடி காலேஜ் பள்ளிவாசலில் நாசர் அலிக்கும் வேறு ஒரு பெண்ணிற்கும் திருமணம் நடக்கவிருந்தது. அங்கு சென்ற ரொபினா, நாசர் அலி தன்னை ஏமாற்றியது குறித்து ஜமாத்தாரிடம் புகார் கூறினார்.

இதையடுத்து சிறிது நேரம் சுவற்றில் முட்டி மோதிய அழுத ரொபினா, பள்ளிவாசல் மண்டபத்தில் அமர்ந்து போராட்டத்தில் இறங்கினார்.  இதையடுத்து ரொபினாவின் புகாரை ஏற்ற ஜமாத்தினர் நாசர் அலியின் திருமணத்தை நிறுத்தி வைத்தனர்.

மேலும் காரைக்குடியில் எந்த பள்ளிவாசலிலும் நாசர் அலிக்கு திருமணம் நடத்துவதில்லை எனவும் முடிவு செய்தனர்.  இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.