டில்லி

கொரோனா சிகிச்சைக் கட்டணத்தை நிர்ணயம் செய்ய  உச்சநீதிமன்றத்துக்கு ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (ஜி ஐ சி) வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாடெங்கும் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருவதால் அரசு மருத்துவமனைகள் எண்ணிக்கை போதுமானதாக இல்லை.  எனவே ப்ல தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா சிகிச்சை அளிக்க இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் அனுமதி அளித்துள்ளது.

இந்த மருத்துவமனைகளில் பல நோயாளிகள் குறிப்பாகக் காப்பீடு எடுத்துள்ள நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்குக் கட்டணம் கிடையாது.   இதைப் போல் அரசு மருத்துவமனைகளால் தனியார் மருத்துவமனைகளுக்குப் பரிந்துரைக்கப்படும் நோயாளிகளின் சிகிச்சைக் கட்டணத்தை அரசு ஏற்றுக் கொள்கிறது.  மற்றவர்களுக்குக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆகவே அனைத்து  நோயாளிகளுக்கும் இலவச அல்லது சலுகைக்கட்டணத்தில் சிகிச்சை அளிக்க ஒரு உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.  இந்த வழக்கு விசாரணையில் ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (ஜிஐசி) உச்சநீதிமன்றத்துக்கு ஒரு சில கோரிக்கைகள் விடுத்துள்ளன.

ஜிஐசி, “கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டணத்தை உச்சநீதிமன்றம் நிர்ணமய்ம் செய்ய வேண்டும்.   அதற்கு உச்சவரம்பு ஒன்றை நிர்ணயிப்பதுடன் காப்பீடு செய்துள்ள மற்றும் செய்யாத நோயாளிகளிடம் ஒரே கட்டணம் வசூலிக்க உத்தரவு இட வேண்டும்.

பல மருத்துவமனைகளில் காப்பீடு செய்துள்ள நோயாளிகளிடம் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.   இதை நிறுத்தி ஒரே கட்டணம் நிர்ணயம் செய்யாவிடில் மருத்துவக் காப்பீடு திட்டத்தை நடத்த முடியாது.  எனவே கட்டணம் நிர்ணயம் செய்யவில்லை எனில்  கொரோனா சிகிச்சைக்கான காப்பீடு வழங்க இயலாது,  அல்லது அதற்கு அதிக பிரிமியம் செலுத்த வேண்டும்” என அறிவித்துள்ளது.